×
Saravana Stores

பாலின பேதங்கள் ஒரு பார்வை

நன்றி குங்குமம் தோழி

பிரிவினை இலக்கணங்களை களைவோம்!

இந்தச் சமூகம் இப்படித்தானே இருக்கிறது? ஆண்களும் பெண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது? அப்படியிருக்க நாம் எப்படி வித்தியாசமாக சிந்தித்தாலும் அவற்றை நடைமுறையில் கொண்டுவர முடிவதில்லையே என்னும் புலம்பல்கள் இங்கு பலரிடமிருந்தும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். தனி மனிதர்களின் கூட்டம்தான் சமூகம் எனப்படுவது. சமூகம் என்பது ஒரு கருத்தாக்கமே தவிர அதற்கென தனி உணர்வோ, உயிரோ இல்லை. நாம் சமூகம் என விளிப்பது நம்மைப்போல வாழும் மற்ற தனி மனிதர்களையே. இதை நாம் புரிந்துகொண்டால், நம் வாழ்வில் நாம் விரும்பும் மாற்றங்களை நாம் செயல்படுத்துவது மிகவும் சுலபம்.

லட்சம் தனி மனிதர்கள் கொண்டது ஒரு சமூகம் என்றால், அந்த லட்சம் தனிமனிதர்களின் இச்சைக்கேற்ப ஒரு தனி மனிதர் வாழ்வை வாழ இயலுமா? நமக்கான முடிவுகளை அந்த லட்சம் தனி மனிதர்களின் சம்மதத்தையும் கேட்டு பெற்று எடுக்க இயலுமா? முடியாது இல்லையா? ஆனால் நாம் அந்த லட்சம் மனிதர்களையும் திருப்திப்படுத்துவதாக நினைத்துதான் நம் வாழ்விற்கான முடிவுகளை நம் விருப்பத்திற்காக அல்லாது அந்த லட்சம் பேரின் விருப்பமும் இதுதான் என்ற மாயையில் ஆழ்ந்துவிடுகிறோம். அந்த லட்சம் பேர்களின் பிரதிநிதியாக ‘அந்த நாலு பேரை’ நாமே நியமித்து வைத்திருக்கிறோம். ஆக கடைசியில் அந்த நாலு பேர்தான் நமக்கான முடிவுகளுக்கு ஆதார சுருதி ஆகிறார்கள். மேலும் அந்த நாலு பேருக்கும் அவரவருக்கான வாழ்வு என்று ஒன்றிருக்கிறது. ஆனால் அவ்வப்போது அவர்கள் பொழுதுபோக்காக மட்டுமே நம் வாழ்வு அவர்களுக்கு இருக்கிறது. சிறிது சிந்தித்துப் பார்த்தோமேயானால், ஒரு நாலு பேரின் பொழுதுபோக்குக்காக நாம் நம் வாழ்வை பணயம் வைக்கிறோம். இது எத்தனை மடமை?

மனிதர்கள் என்ற உருவை எடுத்திருக்கிறோம். நமக்கென அறிவு, உணர்வு, ஆற்றல்கள், விருப்பங்கள் என இருக்கின்றது. அதை வைத்து நாம் வாழ, மற்றவருக்கு தீங்கிழைக்காமல் வாழ நமக்கு உரிமையும் உள்ளது, பொறுப்பும் உள்ளது. அப்படியிருக்க, அவரவர் வாழ்வை அவரவர் நிர்ணயித்து வாழ நம்மை எதுவும் யாரும் தடுக்க இயலாது, நாமே தடுத்துக்கொண்டாலே ஒழிய. பெண்ணாக உருவெடுத்திருந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்றோ, ஆணாக உருவெடுத்திருந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்றோ நமக்கு இலக்கணம் வகுக்க இங்கு யாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

யாரோ, என்றோ தங்கள் சுயநலம் பொருட்டு ஏற்படுத்திச் சென்ற இலக்கணங்களுக்குள் நம்மை சுருக்கிக்கொண்டு வாழ நம்மை நாமே ஏன் நிர்பந்தித்திக்கொள்ள வேண்டும்? இந்த மாதிரி கட்டுக்களை அங்கங்கு யாரோ சில மனிதர்கள் உடைத்ததினாலேயே இன்று சமூகத்தில் பல மாற்றங்களை அடைந்திருக்கிறோம். அப்படியெனில் இங்கு மாற்றங்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும்? தனி மனிதரிடமிருந்துதான் அல்லவா? அதனால் முதலில் நாம் களைய வேண்டியது ‘அந்த நாலு பேர்’ என்ன சொல்வார்கள் என்ற அச்சத்தை. கற்க வேண்டியது, நமக்கென கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு வாழ்வை, என்று முடிவுக்கு வரும் என நாம் அறிய இயலாத ஒரு வாழ்வை நமக்காக வாழவேண்டியது நம் உரிமையும், கடமையும் கூட என்பது.

நம் விருப்பத்தை ஒரு புறம் வைப்போம். நமக்கென சில ஆற்றல்கள் இருக்க, யாரோ ஏற்படுத்தி வைத்த கட்டுக்குள் நாம் அடைந்து கொண்டு, நம் ஆற்றல்களை பயன்படுத்தாமல் இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றிஉள்ள உலகிற்கும் கிடைக்க வேண்டிய பலனை கிடைக்காமல் செய்கிறோம். தங்கள் நிலையை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், நம்மை பயமுறுத்தி கட்டுக்குள் வைக்க இயன்றிருக்கிறார்கள், நாம் நம்மைப் போல சில சாதாரண மனிதர்களுக்கு பயந்து அவர்களுக்கு பலத்தை அளித்துக் கொண்டிருக்கிறோம். இது நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் அடிமைத்தனமல்லவா?

இது எல்லாம் எதை தெளிவாக்குகிறது என்றால், ஒவ்வொரு தனி மனிதரும் விரும்பினால், நினைத்தால், செயல்படுத்த முன்வந்தால், இந்த அர்த்தமற்ற இலக்கணங்களில் இருந்து முதலில் தன்னை விடுவித்துக்கொள்ளலாம். அதன் மூலம், தன்னைச் சார்ந்த நெருங்கிய உறவுகளை, நட்புகளை விடுவிக்கலாம். சிறிது சிறிதாக இந்த வட்டம் பெரிதாகும். அன்று அனைவரும் சமதளத்தில் சந்திக்கலாம். இதிலிருந்து முதலில் பயன்பெறுவது நாம். பிறகு நமக்கு நெருங்கியவர்கள். முக்கியமாக நமக்கு அடுத்த சந்ததியினர். நாம் இதிலிருந்து வெளிவரத் தயங்குவதால் நாம் அடுத்த சந்ததியினர் வாழ்வையும் முடக்குகிறோம் என்பது நமக்கு ஏன் புலப்படுவதில்லை?

வாழ்வென்பது நம் ஆசைகளை நம் ஆற்றல்களை முடக்கிக்கொண்டு வாழ்வதில்லை. நாம் நம்மின் எல்லாவற்றையும் துறந்து மற்றவர்களுக்காக வாழ்கையில், நமக்கு மிஞ்சுவது நிராசையும், மன உளைச்சலும் மட்டுமே. மேலும் இப்படியே நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் அதையே கடத்துவதால், மொத்தத்தில் இங்கு யாருமே வாழ்வதில்லை என்றாகிப் போகிறது. இதுவரை கற்றதெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்காக ஒரு வாழ்வை நாமே புதிதாக உருவாக்குவோம்.

நாம் எந்த பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கு எப்படி வாழ்வது பிடித்திருக்கிறது என்று முதலில் உணர வேண்டும். நம் ஆற்றல் எதிலிருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடிப்போம். எந்த வேலையை செய்கையில் நமக்கு மகிழ்வும் திருப்தியும் ஏற்படுகிறதோ அதை செய்வதற்கான முனைப்புடன் அதற்கான வழிகளை கண்டடைவோம். வாழ்வதற்கு அடிப்படையாக சில அத்தியாவசிய வேலைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை நாம் செய்துதான் தீரவேண்டும். ஆனால் அவற்றிற்கென நேரம் ஒதுக்கி செய்துவிட்டு, கிடைக்கும் மற்ற நேரங்களில் நமக்கு பிடித்ததை ஒரு தொழிலாகவோ இல்லை நமக்கென செய்துகொள்ளும் ஒரு உதவியாகவோ செய்யலாம். இதில் பால் பேதங்கள் அவசியமில்லை.
எந்த பாலினத்தவர் எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற இலக்கணக்கட்டுகளை களைவோம்.

உதாரணமாக, இன்றும் கட்டடக்கலை பொறியாளர் படிப்பு படிக்க விரும்பும், அதில் ஆர்வம் இருக்கும் பெண்களை, உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது, அது ஆண்களுக்குரியது எனத் தடுக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இப்படி பல துறைகளை ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என்று பிரித்து வைத்ததின் பலனாகத்தான் பல துறைகளில் ஆற்றல் மிகுந்த பெண்களின் பங்களிப்பு சிறிய அளவிலேயே இருக்கிறது. கட்டுக்களை உடைத்து தடம் பதிக்கும் பெண்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள். இது இந்தச் சமூகம் கொடுக்கும் அழுத்தம் என்று நம் பொறுப்பை துறக்க இயலாது. இது நம் குடும்பங்கள் கொடுக்கும் அழுத்தம். அந்த அழுத்தத்திற்கு செவிசாய்க்கும் தனி மனிதர்களின் வேலை.

பெற்றோர்கள் தங்களுக்குள் இந்த பேதங்கள் இல்லாமல் வாழ்ந்தாலே பிள்ளைகளை இந்தப் பிரிவினைகள் தீண்டாது இருக்கும். நம் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும் மாற்றத்திற்கான பாதை. பால் வந்தால் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுப்பதாக ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தும் பள்ளிப்பாடங்கள் கொண்ட சமூகம் நம்முடையது. அதை முதலில் வீட்டில் உடைக்க வேண்டும். அப்பாவும் பால் காய்ச்சி காபி போடலாம், அம்மாவும் செய்தித்தாள் படிக்கலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்து, செளகரியத்தை பொறுத்து இருக்க வேண்டுமேயல்லாது நம் சமூகம் இயற்றி வைத்திருக்கும் இலக்கணங்களின் அழுத்தத்தால் இருக்கக்கூடாது.

மனிதராகப் பிறந்த யாராக இருந்தாலும், ஒரு வயதிற்கு மேல் தனக்கான செலவுகளையும், குடும்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கான செலவின் ஒரு பகுதியையும் அவரவர் ஆற்றலுக்கேற்ப, அவரவர் வசதிக்கேற்ப ஈடுகட்ட பணம் ஈட்ட வேண்டும்.பொருளாதார ரீதியாக குழந்தைகள், முதியவர்கள், உடல்/மன ஆரோக்கியம் இல்லாதவர்கள் தவிர யாரும் மற்றவரை சார்ந்திருக்காமல் இருப்பதே பால் பிரிவினையற்ற சூழலை உருவாக்கும் முதல் படி.

ஆண்தான் பொருள் ஈட்ட வேண்டும், பெண்தான் வீட்டு நிர்வாகம் பார்க்க வேண்டும் என்பது உடைபட வேண்டும். இருவரும் எல்லாவற்றையும் பங்கிட்டு செய்கையில், ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களில், செலவுகளில், அது குடும்ப செலவை பாதிக்காத வரையில் இருவரும் தலையிடாது இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ மதிக்காமல் சக மனிதராக மதித்து வாழ்ந்தாலே இங்கு சிறிது சிறிதாகவேணும் இந்தப் பிரிவினைகள் அகலும். ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட பெற்றோரை பார்த்து வளரும் பிள்ளைகளை வேண்டாத பிரிவினைகள் தாக்காமல் இருக்க வழிவகுக்கும். பால்பேதங்கள் அறியாத பிள்ளைகளாக நம் பிள்ளைகளாவது வளரட்டுமே!

(தொடர்ந்து சிந்திப்போம்…)

தொகுப்பு: லதா

 

The post பாலின பேதங்கள் ஒரு பார்வை appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED மார்பகப் புற்று நோய்… பரிசோதனையும் தீர்வும்!