×
Saravana Stores

அல்சர் தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலாலும், உணவு பழக்கங்களாலும் வயது வித்தியாசமின்றி பெரும்பாலானோர் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்னைகளில் ஒன்று அல்சர். காய்ச்சல், தலைவலி போல் இன்று அல்சர் தொல்லையும் இயல்பாகிவிட்டது. அல்சர் என்றால் என்ன, ஏன் வருகிறது, அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் டி.கே. ஆனந்த்.

அல்சர் என்பது என்ன?

அல்சர் என்பது இரண்டுவிதமாக பார்ப்பதுண்டு. அதில் பெப்டிக் அல்சர் என்பதுதான் பொதுவானது. இது தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாயில் ஏற்படும் ஒரு தடை என்று சொல்லலாம். இதைதான் அல்சர் என்கிறோம். இதில் பெப்டிக் அல்சர் என்பது இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதனாலும், பெப்சின் எனும் என்சைம் அளவுக்கு அதிகமாக சுரப்பதனாலோ அங்கு ஏற்படும் புண்களைப் ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இது இரைப்பையில் வரலாம் அல்லது சிறுகுடல் ஆரம்பிக்கும் முன்பகுதியில் வரலாம்.

இதற்கு முக்கியமான காரணம் இரண்டு. ஒன்று, எச்.பைலோரி என்கிற பாக்டீரியா கிருமிகள் மற்றும் தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதனாலும்தான் பெரும்பாலும் பெப்டிக் அல்சர் ஏற்படுகிறது.

அல்சர் ஏற்பட காரணங்கள்

பெரும்பாலும் அல்சர் வருவதற்கு காரம் நிறைந்த உணவுகள் மற்றும் வேளா வேளைக்கு நேரத்துடன் சாப்பிடாததுதான் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவை மட்டுமே காரணம் இல்லை. எச்.பைலோரி என்கிற கிருமிகள்தான் முக்கிய காரணமாகும். இது தவிர, வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவது போன்றவையும் இரைப்பைப் புண் வர காரணமாக அமைகின்றன.

மேலும் சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர் என்றும் சொல்லப்படுகிறது.

அறிகுறிகள்

வயிறு எரிச்சல் இருக்கலாம். சாப்பிடாமல் பசியோடு இருக்கும்போது வயிறு எரிச்சல் வரலாம். சாப்பிட்டவுடன் வயிறு எரிச்சலோ, வலியோ குறைந்துவிடும். இது பெரும்பாலும் சிறுகுடல் அல்சரில்தான் அதிகம் காணப்படும். இது சில நேரங்களில் இரவில் தூக்கம் கலைந்துபோகும் அளவு எரிச்சல் ஏற்படும். அந்த நேரத்தில் எழுந்து சிறிது தண்ணீர் குடித்தால் சரியானது போன்ற உணர்வு இருக்கும். இவையெல்லாம் அல்சரின் பொதுவான அறிகுறிகளாகும்.

இதுவே சற்று தீவிரமானால், ரத்த நாளங்களில் அல்சர் ஏற்பட்டு ரத்த கசிவை ஏற்படுத்தலாம். இதனால் மலம் கருப்பாக போகலாம், ரத்த வாந்தி எடுக்கவும் வாய்ப்புண்டு. அதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சைமுறைகள்

எரிச்சல், அஜீரணம், வலி போன்றவை தொடர்ந்து இருக்கும்போது, அல்சர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எண்டோஸ்கோபி செய்து தெரிந்து கொள்ளலாம். அல்சர் இருப்பது உறுதியானால், அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் எடுக்க வேண்டும். இதுவே அல்சர் இல்லாமல், பாக்டீரியாக்கள் மட்டும் இருந்துகொண்டு வலியை ஏற்படுத்தினால், பாக்டீரியாக்களை எடுத்து பயாப்சி மூலம் சோதித்து பார்த்து எச். பைலோரி கிருமிகளுக்கு சிகிச்சை கொடுத்தால், அல்சர் சரியாகும்.

இதுதவிர, இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிப்படுத்திக்கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதுபோல், முன்சிறுகுடலில் அடைப்பு உண்டானவர்களுக்கும் அறுவைசிகிச்சை தேவைப்படும்.

தற்காப்பு வழிமுறைகள்

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. அடுத்து, எச். பைலோரி கிருமிகள் பொதுவாக உணவுகள் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. அதனால், சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சுத்தமான காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும்.

அதுபோன்று அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உணவு உண்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதுபோன்று, ஒரே தட்டில் பலரும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அது முற்றிலும் தவறானது. எனவே, அதுபோன்று சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். மேலும் நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை தவிர்த்து விட வேண்டும். இவைகளை கடைப்பிடித்தாலே அல்சரில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post அல்சர் தவிர்ப்போம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!