ராஜாக்கமங்கலம் : ராஜாக்கமங்கலம் அருகே வாளிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை மாவட்டம் கோழிப்பண்ணை காடு மதியழகன் நகரை சேர்ந்தவர் விஜயன் மகன் தவசி(22). இவரது மனைவி மலர் என்ற கண்ணாத்தாள்(21). 3 வயதில் நிரஞ்சனா, ஒன்றரை வயதில் தர்ஷினி என்ற 2 மகள்கள் உண்டு.
இவர்கள் தற்போது குமரிமாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தெக்குறிச்சி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். மதுரையில் உள்ள தவசியின் தங்கை விஜயலட்சுமிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக கண்ணாத்தாள் தனது 2வது மகள் தர்ஷிசி, மாமியார் மணியம்மா, தவசியின் மற்றொரு தங்கை பஞ்சவர்ணம் ஆகியோர்களுடன் நேற்று முன்தினம் மதியம் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் தவசி மற்றும் குழந்தை நிரஞ்சனா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மாலையில் தவசி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மகளை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை வீட்டின் பல்வேறு இடங்களில் தேடினார்.அப்போது குளியலறையில் உள்ள ஒரு வாளியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியவாறு தலைகுப்புற குழந்தை நிரஞ்சனா கிடந்தாள். உடனே குழந்தையை தூக்கி கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ராஜாக்கமங்கலம் போலீசார் நிரஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாளிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் ராஜாக்கமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ராஜாக்கமங்கலம் அருகே வாளிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.