திண்டுக்கல்: மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன. திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம். இதனால் மாவட்டம் எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.
இங்கு விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமானோர் உள்ளனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்டது ஆடலூர்.
இந்நிலையில் ஆடலூர்-பன்றிமலைச் சாலையில் உள்ள அமைதிச்சோலை அருகே இரண்டு குட்டிகளுடன் புலி ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த வழியாக தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புலி அமர்ந்திருந்த பகுதியை கடந்து செல்வதற்கு பயந்து, மீண்டும் தருமத்துப்பட்டிக்கே திரும்பியுள்ளனர். இதனையடுத்து தர்மத்துப்பட்டியில் இருந்து ஆடலூர் செல்லும் பேருந்தில் ஏறி தங்கள் ஊருக்கு சென்றுள்ளனர். அமைதிச்சோலை பகுதியில் 2 குட்டிகளுடன் புலி அமர்ந்திருந்த சம்பவம் தீ போல் பரவியது. இதனால் மலைவாழ் பீதியில் உள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் காட்டுமாடுகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் வலம் வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டுமாடு தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் காட்டுமாடுகள் நடந்து செல்வதைப் பார்க்கும் பொதுமக்களும், பயணிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
* ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அதிகளவில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டத்து வீடுகளில் குடும்பத்துடன் தங்கி விவசாய பணிகளை விவசாயிகள் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் இப்பகுதியில் நடமாடுகின்றன. குறிப்பாக ஆத்தூர் அருகே நீர்த்தேக்கம் செல்லும் வழியில் ரெட்டை புளியமரம் பகுதி, சித்தையன்கோட்டை குடிதண்ணீர் உந்து நிலையம் பகுதி மற்றும் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆத்தூரைச் சேர்ந்த ரவி என்பவரது தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த அப்பகுதி விவசாயிகள் சிலர் அலறியடித்து ஓடியுள்ளனர். பழனிச்சாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆட்டை தூக்கி சென்றுள்ளது. இதேபோன்று நேற்று அதிகாலை சித்தையன்கோட்டை சாலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இது அப்பகுதிமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிமக்கள் நலன் கருதி, அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் தொடர் அட்டகாசம்: வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.