×
Saravana Stores

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 13 பேட்டரி வாகனங்கள் இயக்கம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் இலவச பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 9ல் இருந்து 22ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் சர்வதேச முனையத்திற்கு செல்வதற்கும், சர்வதேச விமான பயணிகள் உள்நாட்டு முனையத்திற்கு செல்வதற்கும், இரு முனையங்களை சேர்ந்த பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் வசதியாக இலவச பேட்டரி வாகனங்களை, இந்திய விமான நிலைய ஆணையம் இயக்கி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் வரை இந்த பேட்டரி வாகனங்கள், மேற்கண்ட சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே ஆகஸ்ட் மாதம் முதல், உள்நாட்டு முனையம் வருகை பகுதி அருகே இருந்த பிக்கப் பாயிண்ட், அந்த இடத்தில் இருந்து மாற்றப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. எனவே இந்த பேட்டரி வாகனங்கள், பயணிகளை ஏற்றிக் கொண்டு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் 9 பேட்டரி வாகனங்கள் மட்டுமே இருந்ததால், அது போதுமானதாக இல்லை.

எனவே பயணிகள் பேட்டரி வாகனங்களுக்காக நீண்ட நேரம், வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் பலர், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, பிக்கப் பாயின்ட் பகுதிக்கு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், உடமைகளுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயணிகள் சமூக வலைதளங்கள் மூலமாக கடுமையாக கண்டித்து, தொடர்ந்து விமர்சித்து வந்தனர். அதோடு கூடுதலாக பேட்டரி வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் வசதிக்காக மேலும் 13 பேட்டரி வாகனங்களை புதிதாக வாங்கியுள்ளது. இவை, நேற்று முதல், சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் மூலம் தற்போது சென்னை விமான நிலையத்தில் 22 பேட்டரி வாகனங்கள் பயணிகள் வசதிக்காக இயங்கத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பேட்டரி வாகனங்களில் ஏறுவதற்கு நீண்ட வரிசைகளில், பயணிகள் காத்து நின்றுதான் ஏற வேண்டியுள்ளது.

அவ்வாறு காத்து நின்று பேட்டரி வாகனத்தில் ஏறி, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றாலும், அங்கிருந்து இரண்டாவது, மூன்றாவது தளத்திற்கு உடமைகளுடன் பயணிகள் லிப்டில் ஏறி, மிகுந்த சிரமப்பட்டு, பிக்கப் பாய்ண்ட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் தரப்பில், ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு, உள்நாட்டு முனையம் வருகை பகுதியில், பிக்கப் பாய்ண்ட் இருந்ததை போல், பழைய இடத்திலேயே பிக்கப் பாய்ண்ட் மாற்றப்படுவது ஒன்றே, பயணிகளின் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 13 பேட்டரி வாகனங்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் 453 ஆமைகள் பறிமுதல்