×

தீபாவளி பண்டிகையையொட்டி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை 23ம் தேதி நடத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒத்திவைக்கப்பட்ட, உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தை வரும் 23ம் தேதி நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை வரும் 23ம் தேதியன்று நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும், தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், 23ம் தேதியன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடுவதுடன், கூட்ட நிகழ்வுகளை `நம்ம கிராம சபை’ செல்போன் ஆப் மூலம் உள்ளீடு செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை 23ம் தேதி நடத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Diwali ,Rural ,Development ,Chennai ,Rural Development ,Ponnaiah ,Local Bodies Day ,Tamil Nadu ,Local Government Day ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!