×

நெல்லை அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு வெட்டு, வீடு சூறை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மலையில் குடியேற முயற்சி

*8 பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

நெல்லை : நெல்லை அருகே வீடுபுகுந்து பாலிடெக்னிக் மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தாலுகா போலீசார் 8 பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மேலப்பாட்டம் பகுதி நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மலையில் குடியேற முயற்சி செய்தனர். இந்த சம்பவங்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

நெல்லை அருகேயுள்ள மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் மனோஜ்குமார் (18). நெல்லை அபிஷேகப்பட்டி அருகேயுள்ள பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மேலப்பாட்டம் பஸ் நிறுத்தம் அருகே மனோஜ்குமார், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோதுவது போல் வேகமாக ஒரு கார் வந்ததை அவர் கண்டித்தார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நபர்கள், அவரை சரமாரியாகத் தாக்கினர். பதிலுக்கு அவரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வரவும், காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு காரில் வந்தவர்கள் தங்கள் பகுதிக்கு சென்று ஒரு கும்பலை அழைத்துக் கொண்டு, மனோஜ்குமாரின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் அதனை தடுத்து அழுது கூச்சலிட்டனர். இதனால் பொதுமக்கள் திரளவே காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் காயமடைந்த மனோஜ்குமாரை குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்ததும் நெல்லை ஏடிஎஸ்பி பாலசுந்தரம், தாழையூத்து டிஎஸ்பி ரகுபதிராஜா, பாளை. தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து பாளை. தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட திருமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை(20), முத்துமாரி மகன் முத்துமாலை(21), கோமு மகன் லட்சுமணன்(21), பால்பாண்டி மகன் லட்சுமணன்(22), 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பார்த்தால் தெரியும் நபர்கள் எனக்கூறி 6க்கும் மேற்பட்டோர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, பொருட்களை சேதப்படுத்துதல், சாதி ரீதியாக திட்டுதல், அவதூறான வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் 191, 296, 381 வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் என 8 பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவரை வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். ஊரில் உள்ள பொதுமக்களுக்கும், வெட்டுப்பட்ட மனோஜ்குமார் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் மேலப்பாட்டம் பகுதி மக்கள் திரண்டு அங்குள்ள சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த எஸ்.பி. சிலம்பரசன், `சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் விரைந்திருப்பதாகவும்’ தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பின்னர் இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கோரி அங்குள்ள மலையில் குடியேறப் போவதாக பொதுமக்கள் புறப்பட்டனர். அப்போது தாழையூத்து டிஎஸ்பி ரகுபதிராஜா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் மலையேறும் முயற்சியை கை விட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலப்பாட்டம் கிராமம் மற்றும் திருமலைக் கொழுந்துபுரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது

பாலிடெக்னிக் மாணவன் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய நெல்லை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சீவலப்பேரி சப்-இன்ஸ்பெக்டர் நாஞ்சில் பிருத்விராஜ் மற்றும் பாளை. தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி இவ்வழக்கில் தொடர்புடைய திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை (20), மற்றொரு முத்துமாலை (22), லட்சுமணன் (21) மற்றும் 17 வயதுள்ள இளஞ்சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள 6க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post நெல்லை அருகே பாலிடெக்னிக் மாணவருக்கு வெட்டு, வீடு சூறை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மலையில் குடியேற முயற்சி appeared first on Dinakaran.

Tags : Taluga Police ,Nella ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே குடோனில் பதுக்கிய 215 கிலோ குட்கா பறிமுதல்