×

கருவேப்பிலங்குறிச்சி அருகே பரபரப்பு துக்க நிகழ்ச்சியில் நாட்டு வெடி வெடித்து வாலிபர் பலி

*2 பேர் படுகாயம்

விருத்தாசலம் : துக்க நிகழ்ச்சியில் சணல் வெடி வெடித்து மேளம் அடிக்கும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் ஆகாஷ்(18). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் அம்சாயாள்(90) என்ற மூதாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்காக ஆகாஷ் தனது நண்பர்களுடன் மேளம் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நேற்று மதியம் மேளம் அடித்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த சணல் அணுகுண்டு வெடிகளை சணலில் கட்டி துக்க வீட்டிற்கு வந்த சிலர் வெடித்துள்ளனர்.

அப்போது ஒரு வெடி பறந்து வந்து ஆகாஷின் தலை மற்றும் உடலில் பட்டு வெடித்துள்ளது. இதில், ஆகாஷின் கை விரல்கள் துண்டாகி தலையில் படுகாயம் அடைந்து மயங்கி
விழுந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் நித்திஷ்(23), சுந்தரமூர்த்தி(63) ஆகிய இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகள் எங்கே கிடைத்தது, யார் வாங்கி வந்து வெடித்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கருவேப்பிலங்குறிச்சி அருகே பரபரப்பு துக்க நிகழ்ச்சியில் நாட்டு வெடி வெடித்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Karuvepilangurichi ,Vridthachalam ,Harikrishnan ,Akash ,Ko. Pavazhangudi ,Vrudhachalam ,Kadalur district ,Karuvepilanguchichi ,
× RELATED விருத்தாசலம்-திட்டக்குடி...