×

நடப்பாண்டு 18,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு

தர்மபுரி, நவ.6: தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக நெல் நடவு பணி தீவிரமாக நடக்கிறது. நடப்பாண்டு, 18,500 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரமாக பரவலாக பெய்து வருகிறது. வாணியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அணை நிரம்பியது. தொடர்ந்து மழைநீர் வரத்தால் வரட்டாறு, ஈச்சம்பாடி அணை நிரம்பியது. சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குழி அணைக்கும் நீர் வரத்துள்ளது. தும்பலஅள்ளி அணையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அணையை தவிர மற்ற 7 அணைகளுக்கும் நீர்வரத்து உள்ளதால், அணையை சுற்றியுள்ள விளைநிலங்களில் உழவுப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. சில இடங்களில் நெல் நாற்று சாகுபடி பணி தீவிரமாக நடக்கிறது.

தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல்சாகுபடி பணி தீவிரமாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், ஆடுதுறை-39, நெல் ஏடிடி-53, ஆடுதுறை-54, கோ-51, கோ-54, கோ-55, டிகேஎம்-13, வெள்ளைப்பொன்னி, விஜிடி-1 உள்ளிட்ட ரகங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடுக்காப்பட்டி, பாடி, பாப்பாரப்பட்டி, நாகவதிஅணை, பஞ்சப்பள்ளி, வாணியாறு, தொப்பையாறு, கேசர் குழி போன்ற பகுதிகளில் நாற்று நடவு பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக 32 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாவாரி நிலத்தில் ராகி, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர்.

இதற்கு 90.53 டன் விதை பயிர்கள் ஈருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயறுவகைகளான துவரை, உளுந்து, பச்சை பயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை சாகுபடி செய்ய 66.710 டன் விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை மட்டும் 13.19 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையை வைத்து நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால் நெல் நடுவதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. நெல் நடும்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் நெல் சாகுபடி செய்யமுடியாமல் தள்ளிப்போகிறது. எனவே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். அங்கு பணிசெய்யும் தொழிலாளர்களை விவசாயப்பணிக்கு அனுப்பினால் தான் நெல் நடவு பணிகள் நடக்கும்.

இல்லாவிட்டால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர். ஆனால் இதுவரை 573.38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக கடந்த இருவாரமாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. அணைகளை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் சாகுபடி தீவிரமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 18,500 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 12,500 ஹெக்டரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

The post நடப்பாண்டு 18,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,North-East Monsoon ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்