பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் அதிகனமழை பெய்தது. ஓராண்டு முழுவதும் பெய்யும் மழை ஒரேநாளின் சில மணி நேரங்களிலேயே கொட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பல நகரங்கள் வௌ்ளக்காடாக மாறின. வேலன்சியா, கஸ்டிலா, லா மஞ்சா, அண்டலுசியா உள்ளிட்ட நகரங்களில் கனமழையால் ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை வௌ்ள நீர் சூழ்ந்ததுடன், சேறும், சகதியும் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வழியின்றி முடங்கினர். பல இடங்களில் சாலைகள் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. மக்கள் குடிநீர், உணவு, மினாசரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி கனமழை வௌ்ளத்துக்கு 217 பேர் பலியாகி விட்டனர்.
இதில் வாலென்சியா நகரின் பைபோர்டோ பகுதி உள்பட அந்நகரம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது உள்ளிட்ட நிவாரண பணிகளில் அரசு சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் மன்னர் பிலிப், அவரது மனைவி ராணி லெடிஜியா ஆகியோர் கடந்த ஞாயிறன்று பைபோர்டோ பகுதியில் வௌ்ள பாதிப்புகளை பார்வையிட சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் மன்னர் பிலிப், ராணி லெடிஜியா மீது சேற்றை வாரி வீசி, திரும்பி போ, திரும்பி போ என முழக்கமிட்டனர். இதேபோல் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்சின் கார் மீதும் சேற்றையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். காவலர்கள் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு பத்திரமாக அழைத்து சென்றனர்.
The post கனமழைக்கு 217 பேர் பலி; ஸ்பெயின் வௌ்ள சேதத்தை பார்க்க வந்த மன்னர், பிரதமர் மீது சேறு வீசிய மக்கள் appeared first on Dinakaran.