×

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.11.2024) கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிக்கு முதலமைச்சர் அவர்களால் 2022-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தொழிலாளர்களின் நலனைப் பேணும் வகையிலும், அவர்களுக்கு பணி செய்திடும் இடங்களின் அருகிலேயே தங்கும் வசதியை ஏற்படுத்திடும் வகையிலும், கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 25.8.2022 அன்று குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மண்டல மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 1.49 ஏக்கர் நிலப்பரப்பில், 98,812 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் விடுதிக் கட்டடம் மூன்று தளங்களுடனும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், இவ்விடுதிக் கட்டடங்கள், “A” மற்றும் “B” ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதில் “A” பிரிவில் 66 அறைகளும், “B” பிரிவில் 45 அறைகளும், என மொத்தம் 111 அறைகளைக் கொண்டதாகவும் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 528 தொழிலாளர்கள் தங்கும் வசதியுடன், 2 மின்தூக்கிகள், விளையாட்டுத் திடல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இவ்விடுதிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sidco ,Goa district Sundarapura ,K. Stalin ,Govai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Marichi Sidco ,Coimbatore ,Sitco ,Chitko ,Chief Minister ,
× RELATED கோவை குறிச்சி சிட்கோவில் தங்க நகை...