×

சீதா கல்யாண வைபோகமே…

பகுதி 1

மிதிலை நகரின் அரண்மனையில் சிவதனுசு வைத்திருந்த அறை முழுவதும் கைலாய மலையின் வாசம் வீசியது. சீதாவின் கால் கொலுசு சத்தம் கேட்டதும், சிவ தனுசு விழித்துக்கொண்டது. சீதா, சிவதனுசின் அருகில் சென்றாள். கொண்டு வந்திருந்த நறுமண பூக்களை ஒவ்வொன்றாக வில்லின் மீது வைத்தாள். கண்மூடி கைகூப்பி வேண்டினாள். “தந்தையுடன் வந்து உன்னை தரிசிக்கும் போதெல்லாம் என் மனம் மிகுந்த ஆனந்த மடையும். இன்று நான் தனியாக வந்திருக்கிறேன். என் உள்மனம் சொல்கிறது, நீ என்னுடன் பேசுவாய் என்று! என்னுடன் பேசேன்.” இந்த ஒரு வார்த்தைக்குக் காத்திருந்தது போல சிவதனுசு பேசத் தொடங்கியது.

“நானும் உன்னுடன் பேசுவதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன். இன்று நம் வாழ்வில் மிக இனிய நாளாக அமையும்.”“உன்னை நான் எப்படி அழைக்கட்டும்? என் தந்தை உன்னைச் சிவனாகவே பூஜிக்கிறார். நான் உன்னை சிவனாகவும், உமைய வளாகவும் பார்க்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் நீ அர்த்தநாரீஸ்வரர். வயதை கணக்கில் எடுத்துக் கொண்டால், பாட்டனாக, பாட்டியாக இருக்கக்கூடும். எனக்கு உன்னை என் தோழியாகத்தான் பார்க்க மிகுந்த ஆசை. என் மனதில் தோன்றுவது எல்லாம் உன்னிடம் ஒன்று விடாமல் பேச வேண்டும் என்ற ஒரு துடிப்பு. உனக்கு ஒரு செல்லப் பெயர்கூட தேர்வு செய்துவிட்டேன்.

தெரியுமா?” என்று சீதா, சிவதனுசின் காதில் மூன்று முறை கூறினாள், “சிவலா! சிவலா! சிவலா!!”“ஆஹா! ஆஹா! இத்தனை வயதிற்குப் பின் எனக்கு நீ பெயர் சூட்டும் வைபவம் நிகழ்த்திவிட்டாய். சிவலா..! சிவலா..! எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”“சிவலா!, எனக்கு நான் பிறந்த கதையும், நீ பிறந்த கதையும் கேட்க வேண்டும் என்று ஆசை. அதுவும் நீ சொல்லி கேட்க வேண்டும் என்று மிகுந்த ஆசை”. “சீதா! பிறந்த கதை என்பதைவிட நானும் நீயும் மிதிலைக்கு வந்த கதை என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும். முதலில் உன் கதையைச் சொல்கிறேன்.”
“உன் தந்தை ஜனகரும் தாய் சுனைனாவும் இந்த நாட்டின் வளத்திற்காக யாகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தார்கள். அந்த வருடத்தில் வைகாசி மாதம், சுக்ல பட்சம், நவமி திதி யாகத்திற்கு உகந்ததாக தலைமை வேத விற்பன்னர் சதானந்தன் தெரிவித்தார். வைதேக நாட்டின் முறைப்படி அரசர் யாகசாலை நடைபெறும் இடத்தை கலப்பையால் உழுது தொடங்கி வைக்க வேண்டும் என்று முடிவாயிற்று.”

“குறிப்பிட்ட சுபதினத்தில் மக்கள் எல்லோரும்கூடி இருந்தார்கள். நாடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. ஜனகர் தனது துணைவியாருடன் யாகசாலை அமையவிருக்கும் இடத்தை அடைந்தார். அலங்கரிக்கப்பட்ட தங்கக் கலப்பையை இரு கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பூமியில் நெஞ்சில் மண் பட விழுந்து வணங்கினார். வானத்தை உற்று நோக்கினார். கண்களை மூடித்தியானித்தார்.

“இறையருள்! எல்லாம் இறையருள்!” என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கலப்பையைக் கொண்டு உழத் தொடங்கினார்.”“வேத விற்பன்னர்கள் நான்கு மறைகளை ஓதினார்கள். கூடியிருந்த மக்கள் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள். பெண்கள் குலவையிட்டார்கள். எங்கும் சந்தோஷம் நிறைந்திருந்தது. இறைவனின் அடியார்கள் வாழ்த்தொலி முழங்கினார்கள்.”

“வான்முகில் வழாது பெய்க! மலிவளஞ் சுரக்க! மன்னன்
கோன்முறை யரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க!
நான்மறை யறங்க ளோங்க! நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் இறையுணர்வு விளங்குக இவ்வுலக மெல்லாம்!
வையம் நீடுக! மாமழை மன்னுக!’’

“இறை உணர்வில் திளைத்த ஜனகர், இறையின் அருகாமையை உணர்ந்தார். இறையருள் எல்லாம் இறையருள்’ என்ற மஹாவாக்கியம் ஒரு மந்திரம் போல மனதில் ஓடியது.”
“கலப்பை முன்னேறிச் சென்றது. மணலை அள்ளி வாரி வாரி இறைத்தது. நிலத்தைத் தோண்டியது. தோண்டிய மணலைப் பணியாளர்கள் அள்ளி வெளியே கொட்டினார்கள்.  சிறிது தூரம்தான் கடந்திருக்கும். ஜனகர் கண்ணில்தான், பள்ளத்தில் இருந்த, அந்த அழகான பெட்டி முதன்முதலில் தென்பட்டது.

உழுவதை நிறுத்தினார். கலப்பையை ஓரத்தில் தள்ளி வைத்தார். குனிந்து பள்ளத்தில் இறங்கினார். பெட்டியை எடுத்தார். மேலே கொணர்ந்தார். பெட்டியைத் திறந்தபோது, ஒரு பெண் குழந்தை சிரித்தபடி இருந்தது. சீதா! அந்தப் பெண் குழந்தை நீதான். ஜனகருக்குச் சந்தோஷமும் ஆச்சரியமும் ஒருங்கே தோன்றியது. கண்களில் ஆனந்த நீர் பொங்க, உன்னை கையில் ஏந்தி வானத்தை நோக்கி “இறையருள் எல்லாம் இறையருள்” என்றார்.

“இந்தக் குழந்தை என் குழந்தை! நம் குழந்தை! இந்நாட்டின் குழந்தை. இதைச் சொல்லச் சொல்ல அவரின் நாக்கு தழுதழுத்தது. அவரின் உற்சாகம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டது.”

“யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. கூடியிருந்த மக்கள், மன்னனின் இறை உணர்வுதான் அந்த இறையையே மகளாகக் கொண்டுசேர்த்திருக்கிறது” என்று வாழ்த்தினார்கள்.“பெயர் சூட்டும் வைபவம் மிகவும் விமரிசையாக நடந்தது. கலப்பையால் தோண்டுகையில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், “சீதா’’ என்று பெயர் சூட்டினர்.

ஜனகனின் மகள் என்பதால், “ஜானகி’’ என்றும், விதேக நாட்டின் இளவரசி என்பதால், “வைதேகி’’ என்றும், மிதிலா நகரத்தின் போற்றுதலுக்குரிய புதல்வி என்பதால், “மைதிலி’’ என்றும், ஜனகரின் பிரியமான மகள் என்பதால், “ஜனக நந்தினி’’ என்றும், பூமியிலிருந்து தோன்றியவள் என்பதால், “பூமிகா’’ மற்றும் “பௌமிகா’’ என்றும், ஜனக மகாராஜனின் உயிரானவள் என்பதால், “ஜனகத்வஜா’’ என்றும், அரசி சுனைனாவின் பெண் என்பதால், “சுனையனசுதா’’ என்றும், தெய்வீக பிறவி என்பதால், “அயோநிஜா’’ என்றும் பல பெயர்கள் உனக்குச் சூட்டப்பட்டன.”“சிவலா! அத்தனை பெயரிலும் உனக்கு மிகவும் பிடித்த பெயர் எது?”“சீதா என்ற பெயர் பிடிக்கும். எல்லா பெயரும் அழகுதான், இருப்பினும் “பௌமிகா’’ என்பது எனக்கு மிகவும் பிடித்தது.”“அப்படியா! சரி. சிவலா! இப்போது நீ உன் கதையைக் கூறேன்.”

“முன்னொரு சமயம் விஸ்வகர்மா எனும் தேவலோகத் தச்சர் இரு மகோன்னத தனுசு களைச் (வில்) செய்தார். அந்த தனுசுகள் இரண்டுமே மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், மேருமலையைப் போல உறுதியானதாகவும் இருந்தன. ஒரு தனுசை சிவபெருமான் எடுத்துக் கொண்டார். மற்றொரு தனுசு திருமாலிடம் கொடுக்கப்பட்டது.”“தட்சன் யாகம் செய்யும் பொழுது, சிவனுக்கு அளிக்க வேண்டிய அவிர் பாகத்தை அளிக்கத் தவறியதால், சிவனுக்கு சினம் ஏற்பட்டது.

சிவன் தன்னுடைய சிவதனுசை எடுத்து தட்சனைக் கொல்வதற்கு எத்தனிக்கையில், தேவர்கள் தடுத்தனர். சினம் தணிந்த சிவன், தேவநாதன் என்பவரிடம் சிவதனுசான என்னைக் கொடுத்துவிட்டார். உன் தந்தையின் மூதாதையரானன தேவநாதன், என்னை உன் தந்தையின் வம்சத்திற்கு அளித்துச் சென்றார். இந்த வம்சத்தில் தோன்றிய ஒவ்வொரு அரசரும் என்னைப் பராமரித்தும், பூஜித்தும் வந்தார்கள். உன் தந்தையும் என்னை சிவனாகவே நினைத்து பூஜித்துவருகிறார். சீதா! என்னுடைய மௌனம் எவ்வளவு நாளாக இருந்து வந்திருக்கிறது. இன்று உன்னிடம் பேசியதில் எனக்குப் பரம திருப்தி.”“எனக்கும்தான் சிவலா! நேரம் ஆயிற்று. நான் சென்று வருகிறேன்.” சீதா அந்தப்புரம் திரும்பினாள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீதா வளர்ந்துவந்தாள். சீதாவிற்கு மணமுடிக்க ஜனகர் தீர்மானம் செய்தார். தனது தலைமை வேத விற்பன்னர் சதானந்தனை அழைத்தார்.
“சதானந்தா! என் மகளுக்குச் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சிவதனுசு விற்கு நாணேற்றுபவனே அவளை மணம் முடிப்பான். மாபெரும் யாகம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். எல்லா மன்னர்களுக்கும் இந்த விவரங்களை தெரியப்படுத்துங்கள்” என்று ஆணையிட்டார். சுயம்வரம் பற்றிக் கேள்விப்பட்டதும், சீதாவிற்கு சிவலாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. சிவதனுசு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சீதை நுழைந்தாள். சீதை வருவது அறிந்ததும், சிவதனுசிற்கு ஆனந்தம் பொங்கியது. பேசத் தொடங்கியது;

“சுயம்வரம் பற்றிய செய்தி காதில் விழுந்தது. அதிலிருந்து உன்னை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் மிகுந்துவிட்டது. நான் உன்னை நினைத்துக் கொண்டேயிருந்தேன். நீயே இங்கு வந்துவிட்டாய்”“சிவலா! உன்னைத் தொட்டு நாண் ஏற்றுபவர்தான் என் கழுத்தில் மங்கள நாண் ஏற்றப்போகிறார். இது தெரிந்து எனக்கு மிகுந்த சந்தோஷமும் மன நிறைவும் உண்டாயிற்று.

என்னை மணம் முடிப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற என் கனவுகள், எதிர்பார்ப்புகள் உனக்குக் கண்டிப்பாகப் புரியும். நல்லவராய், பாசம் மிக்கவராய், வல்லவராய், என்னைப் புரிந்துகொள்பவராய், இனிமையானவராய், இணக்கமானவராய், பொறுமையானவராய், கீர்த்தி உள்ளவராய், பாசம் மிக்கவராய், என் குடும்பத்தின்மீதும் நேசம்கொண்டவராய், மனதிற்கினியவராய், மாண்பு மிக்கவராய், நல் அரசராய், உற்ற தோழமையாய், நல்ல தலைவனாய் என நீளும் என் பட்டியலில் உள்ள அனைத்துக் குணநலன்களும் உடையவராய் ஒருவரை, ஒரு தொடுதலின் மூலம் நீ புரிந்துகொண்டு, தெரிவுசெய்ய வேண்டும். இது உன்னுடைய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உன்னை வேண்டுதலிலும், ஒரு சுகம் இருக்கிறது. உரிமையுடன் எனக்கு நீ இதைச் செய்ய வேண்டும் என்று உன்னைக் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்கிறேன்” என்று சொல்லி சிவதனுசை மென்மையாக முத்தமிட்டாள்.

“ஆஹா! அற்புதம் நீ சொன்ன பட்டியலில் உள்ள அத்தனை கல்யாணக் குணங்களும் ஒருங்கே பெற்றவன் எனக்குத் தெரிந்து ஒருவன்தான் உள்ளான். இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான். நன்மையுடையவன், நாராயணன், நம்பியே உன் கரம் பற்றுவான். மனம் போல் மாங்கல்யம் என்பார்கள். உன் ஒப்பற்ற நல்மனத்திற்கு ஈடாக உனக்கு மணவாளன் அமைவான். நீ உடலானால் அவன் உயிராக உன்னில் இணைவான். நான் உன்னை நேசிக்கின்ற நிஜம், அவனை உன்னுடன் சத்தியமாய்ச் சேர்த்து வைக்கும். இப்போது உன் முகத்தில் தவழும் அந்தப் புன்னகை வாழ்நாள்தோறும் உன்னுடன் இருக்க என்னுடைய வாழ்த்துகள்.”

சுயம்வரத்திற்கு முந்தைய நாள். சீதா, தன் சகோதரி ஊர்மிளா, ஒன்றுவிட்ட சகோதரிகள் மாண்டவி, ச்ருதகீர்த்தி மற்றும் தோழிகளுடன் அரண்மனையின் உட்பரிகையில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். ச்ருதகீர்த்தி, “நாளை இந்த நேரம் சுயம்வரம் முடிந்திருக்கும். அதன் பின் சீதை நம்மோடு இப்படி விளையாட வருவாளா?” என்றாள்.

“அதெல்லாம் சரிதான். யார் சிவதனுசை நாணேற்றி என்னை மணமுடிக்கப்போகிறார்களோ? என்ற கவலை ஒரு புறம்! பயம் ஒரு புறம்! இதற்கும் மேலாக இன்று காலையில் நான் கண்ட ஒரு கனவு…..’’ என சீதா முடிக்கும் முன்பே, நீலமாலை, சீதாவின் உற்ற தோழி இடைமறித்தாள். எல்லோரும் ஒட்டுமொத்தமாக சீதையை வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

“கனவா? சொல்! சொல்! யார் வந்தார்? பேரரசனா? பேரழகனா? போர்வீரனா? அதிகாலையில் கண்ட கனவல்லவா? கண்டிப்பாகப் பலிக்கும். சொல்.. சொல்”“கூறுகிறேன். கண்டிப்பாகக் கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் யாரும் நடுவில் குறுக்கிடக்கூடாது.’’“ஆகட்டும் நிறைய பீடிகை போடாமல் நீ சொல்.” சீதை சொல்லத் தொடங்கினாள்;

“தோழி! வாரணம் ஆயிரம் சூழ அவர் நடுவில் கம்பீரமாக நடந்து வருவதாகக் கனா கண்டேனடி!”
சீதை இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம் ராமன், இலக்குவன், விஸ்வாமித்திரர் மிதிலை நகரின் அலங்கார நுழைவாயில் வழியாக நுழைந்தார்கள்.

“தோழி! பாளையோடு கூடிய கமுகினால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தல் முழுவதும் மாவிலையும், கூந்தல் பனையுமாலான தோரணங்கள் ஆடுவதாக கனா கண்டேனடி!” ராமனை வருக! வருக! என வரவேற்பது போல, மிதிலை நகரத்து வாயிலில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. அந்தக் கொடிகள், மேகங்கள் பொழிந்த நீரால் நனைந்தன.அகில் புகையால் உலர்ந்த கொடிகள் பறந்தன.

“தோழி! அழகிய இளம் பெண்கள் கதிர வனைப் போன்ற ஒளியுடைய மங்கள தீபங் களையும் பொற்கலசங்களையும் கையில் ஏந்திக்கொண்டு, எதிர்கொண்டு அவரை வரவேற்பதாகக் கனா கண்டேனடி!” ராமன், மிதிலைவீதியின் இரு மருங்கிலும் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், சித்திரப் பதாகைகள், பூக்களால் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டு ரசித்தபடியே நடந்து வந்தான். மிதிலை நகரமே மிகவும் ரம்யமாக, ராமனுக்குத் தோன்றிற்று.

“தோழி! மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றோத, மங்கள இசை எனக்குக் கேட்டதடி, தோழி!”ராமன், மிதிலையின் ராஜவீதியில் நடந்து வருகையில் துந்துபிகள் முழங்கின. புல்லாங்குழல் இசைத்தார்கள். எங்கும் நாதமயமாக இருந்த அந்த வீதியில் மூவரும் நடந்து வந்தார்கள்.“தோழி! தேவர்கள், மணமகன் வீட்டார் என ஒரு பெரிய கூட்டமே அவரைச் சூழ்ந்திருந்தது. அவர் என் கையைப் பற்றினார். அவ்வளவுதான், கனவு கலைந்துவிட்டதடி தோழி?”“அவர் முகத்தை நீ பார்த்தாயா? முகம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று நீலமாலை கேட்டாள்.

“கனவிலும் என் நாணம் என்னை விடவில்லையடி. அவர் என் கையைப் பற்றும்போது சூரியஒளி என்னைச் சூழ்ந்து இருந்ததை உணர்ந்தேன்! அவர் முகத்தை நான் பார்க்கவே இல்லையடி, தோழி!”“கவலையை விடடி. உன் மனதுக்கு ஏற்ற மணவாளன் எங்கோ பிறந்து இப்போது இங்கேதான் வந்து கொண்டிருப்பான். இது சத்தியம். நீ வேண்டுமானால் பாரேன்!” என்றாள் நீலமாலை. மேலும், நீலமாலை தொடர்ந்தாள்,

“சீதா! நீ பெண்ணின் ஜோதி! பூவின் நறுமணம்! குளிர்ச்சியின் எல்லை! கவியின் இன்பம்! இவை எல்லாமுமே ஒன்றிணைந்தவள் நீ! அமுதத்தில் தோய்த்த தூரிகை எடுத்து ஓவியமாக உன்னை வரைய மன்மதனே முற்பட்டாலும், தோற்றுத்தான் போவான். எல்லோரும் ஒரு பெண்ணை வர்ணிக்கையில் இவள் மகாலட்சுமி போல் இருக்கிறாள் என்று சொல்வார்கள். ஆனால், மகாலட்சுமியே நீயாக இருக்கும்போது என்ன உவமையைச் சொல்வது!”

(பகுதி – 2 அடுத்த இதழில்…)

கோதண்டராமன்

The post சீதா கல்யாண வைபோகமே… appeared first on Dinakaran.

Tags : Mount Kailaya ,Shivadanusu ,Mithlai Nagar ,Sita ,Kolusu ,Siva Sagittarius ,Sivadanushin ,
× RELATED ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்