×

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, குமரி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை மற்றும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவானது. கோத்தகிரி மற்றும் முள்ளாங்கானவிளையில் 7 செ.மீ, குன்னூர் மற்றும் சூலூரில் 6 செ.மீ மழை பதிவானது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் நவ.8ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.9ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.10ம் தேதி திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!