×
Saravana Stores

புதுச்சேரி, வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

*அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்-பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி, வில்லியனூர் மற்றும் அரியாங்குப்பம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதிரடியாக அகற்றினர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடைகளை தாண்டி முகப்பு கூரைகள், விளம்பர போர்டுகளை வைத்துள்ள வியாபாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடமில்லாததாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அனுமதியின்றி பேனர் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள், அமாவாசைக்கு முந்தைய நாள் பாரதி வீதியில் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். மேலும் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதில் இருசக்கர வாகன ஓட்டிகளும் எதிரெதிரே வருவதால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள், சமூக அமைப்பினர் விடுத்த கோரிக்கையின்பேரில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய துறையினர் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி புதுவை முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக புதுச்சேரி நேரு வீதி- ராஜா தியேட்டரில் இருந்து கிழக்கு போக்குவரத்து காவல் நிலையம் வரையிலும், வில்லியனூரில் தேரோடும் வீதி (கிழக்கு) மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத ஆட்டோ ஸ்டாண்டுகள் ஆகியவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், வருவாய் துறை அதிகரிகள், நகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகரிகள் ஆகியோர் பொக்லைன் உதவியுடன் நேரு வீதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதிகளில் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பர போர்டுகளை அதிரடியாக அகற்றினர். பூக்கடை வியாபாரிகள் பெரிய மேஜை போட்டு அதில் பூக்களை பரப்பி விற்பனை செய்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டி இந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. அப்போது வியாபாரிகள், அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர். மேலும் நேரு வீதியில் போக்குவரத்து ெநரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி, கிழக்கு போக்குவரத்து எஸ்பி செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுரேஷ்பாபு மற்றும் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.
தொடர்ந்து வில்லியனூர் தேரோடும் வீதி (கிழக்கு) பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

இதேபோல் அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று பாகூர் தேரோடும் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 29ம்தேதி வரை புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் இப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி, வில்லியனூர், அரியாங்குப்பம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Willianur ,Arianguppam ,Dinakaran ,
× RELATED பணம் கொடுக்கல்,வாங்கல் பிரச்னையில்...