திருப்பூர் : நாடு முழுவதும் கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையுடன் 29ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்து வரக்கூடிய வட மாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த சனிக்கிழமை மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூர் திரும்பி வரத் துவங்கினர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பினர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர். பனியன் நிறுவனங்களும் வழக்கம்போல இயங்க தொடங்கி உற்பத்தியை தொடங்கின.
தீபாவளிக்கு முன்னதாகவே ஏராளமான ஆர்டர்கள் வரப்பெற்றதன் காரணமாக இந்த ஆண்டு அதிக விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்து பணிக்கு திரும்ப வலியுறுத்தி இருந்தனர். அதன்படி தொழிலாளர்களும் விடுமுறை தினத்தில் தீபாவளியை கொண்டாடி முடித்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில் நேற்று முதல் வழக்கம்போல பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றனர். இதன் காரணமாக பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின. இருப்பினும் வட மாநிலங்களில் இன்றைய தினம் தொடங்க உள்ள சாத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்கள் இன்னும் பெரும்பாலானோர் திருப்பூர் திரும்பவில்லை. பண்டிகை முடிந்து 8ம் தேதிக்கு பிறகு அவர்கள் திருப்பூர் திரும்பி வர வாய்ப்புள்ளது.
இது குறித்து உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தேவராஜ் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு வந்த தீபாவளிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் சோதனையை தந்தது. அதிலிருந்து மீண்டு வரக்கூடிய நம்பிக்கை 2024 தீபாவளி பண்டிகை அளித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதிய ஆர்டர்கள் கிடைக்க பெற்று புதிய உத்வேகத்துடன் அதனை முடித்து வர்த்தகர்களுக்கு அனுப்பி உள்ளனர். தற்போது கையிருப்பிலும் சில ஆர்டர்கள் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கான ஆர்டர்களும் விரைவில் கிடைக்க பெறும்’’ என்றார்.
விடுமுறை குறைந்தது, பணிகள் தொடங்கியது
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று இருப்பதன் காரணமாக தீபாவளி பண்டிகை முடிந்த 5 தினங்களுக்குள்ளாக பெரும்பாலான நிறுவனங்கள் செயல்பட தொடங்கின. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூர் திரும்பி வழக்கம் போல பனியன் உற்பத்தியில் ஈடுபட தொடங்கினர்.
செயல்பட தொடங்கிய சார்பு நிறுவனங்கள்
திருப்பூரில் பனியன் உற்பத்தியை சார்ந்து பிரிண்டிங், எம்ராய்டிங், அயர்னிங் உள்ளிட்ட நிறுவனங்களும் மற்றும் பனியன் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக கடைகளும் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை முடித்து பெரும்பாலான பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதையடுத்து அதனை சார்ந்த நிறுவனங்களும் வர்த்தக கடைகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகை முடிந்து திருப்பூர் முன்கூட்டியே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் வருகை குறைவு
தீபாவளி பண்டிகைக்காக ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் பெரும்பாலானோர் இன்னும் திருப்பூர் திரும்பவில்லை. சூரிய வழிபாடு நடத்தக்கூடிய சாத் என்னும் பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்தி பெற்றதாக இருப்பதன் காரணமாக 8ம் தேதி பண்டிகை நிறைவடைந்த பின்பே அவர்கள் திருப்பூர் திரும்ப உள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் இல்லாததால் பனியன் உற்பத்தியில் பெரிதளவு பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கின்றனர்.
The post தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின் திரும்பிய தொழிலாளர்கள் உற்பத்தியை தொடங்கிய பின்னலாடை நிறுவனங்கள் appeared first on Dinakaran.