விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதையில் கழிவுநீர் குழியில் விழுந்தவர் மீட்கப்பட்டுள்ளார். சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே நெடுஞ்சாலைதுறை சார்பாக கழிவு நீர் கால்வாய் அமைத்தல் மற்றும் சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பள்ளத்தில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், கழிவு நீர் தேங்கியுள்ள பகுதியில் சாலையோரம் மது போதையில் படுத்திருந்த நபர் ஒருவர் கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தவறி விழுந்திருக்கும் சிசிடிவி காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்ட நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதையில் கழிவுநீர் குழியில் விழுந்தவர் மீட்பு..!! appeared first on Dinakaran.