* பக்தர்களை தாக்கியதால் பதற்றம்
ஒட்டாவா: கனடாவில், காலிஸ்தான் கொடியுடன் இந்து கோயிலுக்குள் நுழைந்த பிரிவினைவாதிகள், அங்கிருந்த பக்தர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. ‘இதை ஒருபோதும் ஏற்க முடியாது’ என, அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவும் கடுமையாக கண்டித்துள்ளார். கனடாவில் அதிகளவில் சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க போராடி வருகின்றனர். கனடாவில் உள்ள பிரிவினைவாத சீக்கியர்களை குறிவைத்து இந்திய அரசு வன்முறைகளை நிகழ்த்தி வருவதாகவும், அங்குள்ள சீக்கிய தலைவர்கள் கொலைக்கு இந்திய அரசே காரணம் என்றும், அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனால், இரு தரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள இந்து கோயிலுக்குள், காலிஸ்தான் இயக்கக் கொடியுடன் அதிரடியாக நுழைந்த சீக்கிய பிரிவினைவாதிகள் அங்கிருந்த பக்தர்களை கடுமையாக தாக்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘கனடா நாட்டு குடிமகன்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் மத நம்பிக்கையை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பின்பற்ற உரிமை உள்ளது.
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது’ எனக் கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில், கனடா அரசு கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறது ’ எனத் தெரிவித்துள்ளார். ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ கனடா இந்து கோயிலில் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறைச் செயல்களை இந்தியா கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவதை கனடா உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடா அரசு நீதியை உறுதி செய்யும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை
கனடாவில் காலிஸ்தானி ஆதரவு கும்பலால் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’ கனடாவில் வேண்டுமென்றே இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் மிகவும் பயங்கரமானது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post காலிஸ்தான் கொடியுடன் நுழைந்தனர்; கனடாவில் இந்து கோயிலுக்குள் புகுந்து சீக்கிய பிரிவினைவாதிகள் வன்முறை: இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.