×

திருச்சி பஞ்சப்பூரில் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ரூ237.87 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: 2026ல் பயன்பாட்டுக்கு வருகிறது


திருச்சி மாநகராட்சியில் கழிவு நீர் மேலாண்மைக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ237.87 கோடியில் 100 MLD கொள்ளளவு கொண்ட வரிசை படுத்துதல் தொகுதி உலை நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பஞ்சப்பூரில் அதிவேகமாக நடந்து வருகிறது. மாநகரில் சேரும் கழிவு நீரை கையாள்வது மாநகராட்சிக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது. திருச்சி மாநகராட்சி, 1987ம் ஆண்டு நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் பொன்மலை கோட்டம் வார்டு எண்.39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் நகராட்சிக்கு சொந்தமான 247.50 ஏக்கரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 30.00 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது.

மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கழிவுநீரின் அளவும் அதிகரித்ததால் இது கடந்த 2000ம் ஆண்டு தேசிய நிதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 58.64 MLD கொள்ளளவு கொண்ட, அதே கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 58.00 MLD கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதற்கேற்ப கழிவுநீரின் அளவும் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக தற்போது இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டபோது, தற்போது நடைமுறையில் இருக்கும் முறைப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு அதிக இடம் தேவைப்பட்டது.

அதோடு காலப்போக்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேலும் தற்ேபாதைய தொழில்நுட்பத்தின்படியே விரிவாக்கம் செய்ய வேண்டுமாயின், இங்கிருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான மொத்த இடத்தையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவே பயன்படுத்தும் நிலை ஏற்படும். எனவே குறைந்த இடத்தில் அதிக கழிவுநீரை கையாளும் வகையிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான முயற்சியாக நவீன தொழில்நுட்பமான SBR Technology முறையில் 100 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இத்திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகத்தின் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் வார்டு எண் 39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 12.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு, ஒப்பந்தம் கோருதல், அரசாணை வெளியிடுதல் என பல்வேறு கட்ட அரசுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2.5.23ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ216.20 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக 24.11.2023 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. நவீன தொழில் நுட்பம் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்படும் போது திட்ட மதிப்பீடு ரூ237.87 கோடியாக இறுதி செய்யப்பட்டதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 12.3.24 அன்று திட்டத்துக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட 12.5 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 485 ச.மீ பரப்பளவில் இத்தொகுதி (Unit) அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக மட்டும் (Buildup Area) 16 ஆயிரத்து 334 ச.மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் 42.5 X 42.5 ச.மீட்டர் நீள, அகலத்துடன், 6.3 ச.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் 6 தொட்டிகள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான முக்கிய அமைப்பாகும்.

பசுமை பகுதிக்காக (Garden Area) 10 ஆயிரத்து 720 ச.மீ, பிற தேவைகளுக்காக (Open Area) எஞ்சிய பகுதியும் விடப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளுக்குள் கழிவுநீர் முதலில் செலுத்தப்படுகிறது. பின்னர் தொட்டிகளுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு பாக்டீரியாக்கள் வளர்க்கப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் கழிவுநீரிலுள்ள கசடுகளை அழிக்கிறது. பின்னர் தெளிந்த நீர் வெளியேற்றப்பட்டு ‘குளோரினேசன்’ செய்யப்படுகிறது. குளோரின் மூலம் துாய்மை படுத்தப்பட்ட 100 MLD தண்ணீரில், 90 MLD தூய்மையான தண்ணீர் கோரை ஆற்றில் விடப்படவுள்ளது. மீதமுள்ள 10 MLD தண்ணீர் மீண்டும் மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்கு பின்னர், புதிய பஸ் முனையத்தின் கழிவறை மற்றும் அங்கு அமைக்கப்பட்டு வரும் பசுமை பரப்புக்கான (பூங்காக்கள்) பயன்பாட்டுக்காக மட்டும் அளிக்கப்படவுள்ளது.

கோரையாற்றில் விடப்படும் துாய்மையான நீர், விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆண்டு முழுவதும் பயன்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 18 மாத திட்டப்பணி வரும் 2026 மார்ச் மாதத்துக்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.

The post திருச்சி பஞ்சப்பூரில் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ரூ237.87 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: 2026ல் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Amrut ,Trichy Panjapur ,Panjapur ,Amruth Scheme ,Management ,Trichy Corporation ,Dinakaran ,
× RELATED சிகாகோவில் முதல்வர் முன்னிலையில்...