×
Saravana Stores

குரு தத்துவம்

பகுதி 1

எல்லா சம்பிரதாயங்களிலும் உள்ள ஒரு தினம்எல்லா சம்பிரதாயங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் என்று சில தினங்களைத்தான் சொல்ல முடியும். சைவமாகட்டும் வைஷ்ணவமாகட்டும்ஞ் சமயங்களான புத்த மதமோ ஜைனமோ அல்லது தத்துவரீதியாக துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் போன்ற தத்துவங்கள் ஆகட்டும் என்று எல்லா சம்பிரதாயங்களிலும் ஏற்றுக்கொண்ட ஒரு தினம் என்றால் அது (ஆஷாட) ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி. வியாசபூர்ணிமா என்று சொல்லக்கூடிய குரு பூர்ணிமா. என்று சொன்ன எல்லா சம்பிரதாயங்களைச் சேர்ந்த மடங்களிலும் கூட இன்று வியாச பூஜை விமர்சையாக நடைபெறும். எந்த சம்பிரதாயமாக இருந்தாலும் இந்த தினத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், குரு இல்லாத ஒரு சம்பிரதாயம் கிடையவே கிடையாது. குருநானக் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கோயிலையே குரு த்வார் என்றுதான் அழைப்பார்கள். குரு தத்துவத்தை சொல்லாத சமயமே கிடையாது. இறைவனுடைய இருப்பைப் பற்றி சொல்லாத தத்துவம் உண்டு. ஆனால், குருவைப்பற்றி சொல்லாத தத்துவங்கள் எதுவுமே கிடையாது. ஒரு truthஐ நோக்கிச் செல்லும்போது நிராகரிக்க முடியாத தத்துவம் இந்த குரு தத்துவம். அப்படிப்பட்ட குரு தத்துவத்திற்கு மிகுந்த மரியாதை செய்யக் கூடிய ஒருநாள்தான் குரு பூர்ணிமா. எல்லா வருடத்திலும் குறிப்பிட்ட இந்த நாளை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தனர்.

ஆஷாட மாதம் என்கிற ஆடிமாத பௌர்ணமியை குருபூர்ணிமாவாக வைத்திருக்கிறார்கள் எனில், இந்த நாளானது வேத வியாச பகவானுடைய அவதார தினமாக இருக்கிறது. நாம் யாரை வியாசர் என்று சொல்கிறோமோ அந்த கிருஷ்ண துவைபாயனரின் அவதாரம் நிகழ்ந்த தினம்.

அவர் அவதாரம் செய்த நாள் ஏன் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது?
சரி, அவர் அவதாரம் செய்த நாள் ஏன் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அவருடைய அவதாரம் ஒன்று நிகழ்ந்ததனால்தான் இன்றைக்கு நாம் ஒரு தத்துவம், புராணம், வேதாந்தம், truth என்றெல்லாம் இன்று என்னென்னவெல்லாம் இருக்கிறதோ அதற்கெல்லாம் அடிப்படையை அளித்ததே வேத வியாசர்தான். அதனால்தான் வியாச பகவானை ஆதிகுரு என்று சொல்கிறோம். ஏன் அவரை ஆதிகுரு என்று சொல்கிறோம்.ஆதி என்று சொல்வதற்கான காரணம் என்னவெனில், ஆன்மிகமாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் ஆழமாக அத்யாத்மிகமாகவோ முதல் அடி எடுத்து வைக்க வேண்டுமென்றாலும்கூட அங்கு வியாசருடைய பங்களிப்பு வந்துவிடும். ஏனெனில், லௌகீகமான வாழ்க்கை மட்டுமே போதும் என்கிற நிலையை மாற்றி அடுத்தது என்ன என்று பார்க்கும்போது, இதையெல்லாம் தாண்டி சாரமான விஷயம் இருக்கிறது. அத்யாத்மம் என்று ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டு முதல் அடி எடுத்து வைக்கும்போது அங்கே வியாசர் வந்து நிற்பார். ஆன்மிகத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லும்போது ஆன்மிகத்தை கதைகளாகத்தானே கொடுக்கிறோம். இந்த கதைகள் அம்மா மூலமாகவும் பாட்டி மூலமாகவும் குழந்தைகளுக்குச் செல்கிறது. அங்கேயே அத்யாமமான ஒரு விஷயம் ஆரம்பித்து விடுகின்றது. கதைகளின் வழியே வியாசர் வருகிறார் முதலில் ஆன்மிகமாக வந்து எது நிற்குமெனில் இதிகாசங்களும் புராணமும்தான் வந்து நிற்கும். பாரததேசத்தில் சொல்லக்கூடிய பெரிய இதிகாசம் ராமாயணம், மகாபாரதம், பதினெட்டு புராணங்கள். இப்படி கதைகளின் வழியேதான் வருகிறார். ஒரு ஊர்ல என்றுதான் உலகின் முதல் கதை தொடங்குகிறது. இவை அனைத்தையும் வியாசர்தான் செய்கிறார். எப்படி குழந்தை நடக்கத் தொடங்கும்போது கைபிடித்து நடக்க வைக்கிறோமோ அதுபோல ஆன்மிகம் என்று வரும்போது முதன்முதலாக கைபிடித்து கதைகளின் வழியே நம்மை அழைத்துப்போவது வியாச பகவானே. அவர்தான் முதல் கையை கொடுக்கிறார். வியாசம் என்றாலே தொகுத்தல். அடுத்ததாக ஆத்மஞானத்தை நோக்கிய சாஸ்திரத்தை நோக்கி வியாசர் நகர்த்துதல்.

சரி, புராண இதிகாசங்கள் பார்த்து அதற்குள்ளாக இருக்கக்கூடிய ஆழமான விஷயங்களையெல்லாம் பார்த்து, இந்த புராண இதிகாசமெல்லாம் ஆத்ம ஞானத்தை நோக்கித்தான் கொண்டு போகிறது என்றெல்லாம் ஓரளவிற்கு தெரிந்து குருவினுடைய அனுக்கிரகத்தினால் சாஸ்திரத்திற்குள் நுழையும் போதும் அங்கு வேதத்தையும் வேதத்தின் ஞான பாகமான உபநிஷதத்தையும்தான் அடிப்படையாக கொண்டிருக்கிறது. சரி, வேதத்தை நான்காக தொகுத்ததும். அதன் ஞான காண்டமான உபநிஷதத்தை தொகுத்து கொடுத்தது யாரென்று பார்த்தால் அவரும் வியாச பகவானே. அப்போது முதல் அடியான புராண இதிகாசம் மூலமாகவும், மிகப்பெரிய ஞான பொக்கிஷங்களான உபநிஷதங்களையும் வேதங்களையும் தொகுத்தவரும் வேத வியாசரே ஆவார். உபநிஷதங்களை திரட்டி தத்துவத்தின் மூலத்தை பிரம்ம சூத்திரம் என்று காட்டியவரும் வியாச பகவான்தான். குரு தத்துவத்தை வியாசரே உலகிற்கு முதலில் காட்டியவர் இப்படியாக நாம் அறியாமலேயே நமக்கு பின்னால் வியாசர் வருகிறார். எத்தனையோ பேர்களில் குரு இருக்கலாம். குருமார்கள் வெவ்வேறாக இருக்கலாம். நாமங்களும் ரூபங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அத்தனை பேர்களுக்கும் இருக்கும் குரு தத்துவம் என்பது ஒன்றுதான். அந்த குரு தத்துவத்திற்கு பிரதிநிதியாக நாம் யாரை வைக்கிறோமெனில் வேத வியாச பகவானை வைக்கிறோம். எனவேதான், அவரவர்கள் குருவிற்கு முக்கியத்துவம் காண்பிப்பதற்காக வேண்டி அவரவர்கள் குருவிற்கான மரியாதையை ஆதிகுருவான வியாச பகவானின் அவதார தினத்தன்று குரு பூர்ணிமாவை வைக்கிறார்கள். வியாசாய விஷ்ணு ரூபாயஞ்வியாச ரூபாய விஷ்ணுவே விஷ்ணுவே வியாசராக வருகிறார்.

அடுத்த வேத வியாசராக அஸ்வத்தாமன் வியாசர் என்கிற நிலை என்பது ஒரு பதவிபோல் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு துவாபர யுகத்திலும் அந்த பதவியில் இருந்து வியாசர் செய்கின்ற வேதங்கள் தொகுக்கும் வேலையை செய்வார்கள். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒவ்வொரு வியாசர் வருவார். இப்போது சென்ற யுகத்தில் வந்தவர் கிருஷ்ண துவைபாயனர். அப்படியே அடுத்த துவாபர யுகம் வரும்போது இந்த வியாச பதவிக்கு துரோணருடைய மகனான அஸ்வத்தாமன் வருவார். அடுத்த வேத வியாசர் அஸ்வத்தாமன். இதற்கு என்ன ஆதாரம் எனில் திருவனந்தபுரம் கோயிலில் ஒரு சிற்பத்தில் இப்போதைய வேத வியாசர் உபதேசம் செய்கிற மாதிரியும் அடுத்து வருகிற அஸ்வத்தாமன் உபதேசத்தை கேட்பது மாதிரியுமான சிற்பம் இருக்கிறது. பூரணமே குரு அதனால் குரு பூர்ணிமாநம்முடைய உபநிஷதங்களில் இருக்கக்கூடிய பூர்ணமத பூர்ணமிதம் என்று ஈசா வாஸ்ய உபநிஷதத்தில் சாந்தி மந்திரமாக உள்ளது. பூரணம் என்றால் முழுமை. எந்த தத்துவத்தை எடுத்துக்கொண்டாலும் மேலான பொருளை பூரணம் என்கிறோம். சந்திரன் பூரணமாக இருக்கும்போது அங்கு குறைதலும் இல்லை. வளர்தலும் இல்லை. அதுபோல மனசானது எப்போது தேய்தலும் வளர்தலும் இல்லாமல் இருக்கும் நிலையினை அடையுமோ அப்போதுதான் அது சொரூபத்தில் நிலைபெற முடியும். வளர்தலும் தேய்தலும் இல்லாத நிலையை பூரணத்தை காண்பிப்பவரே குரு ஆவார். எனவே, அந்த குருவினுடைய தினத்தை அந்த பூரணத் தன்மையை யார் கொடுக்கிறா ரோ அந்த குருவை நாம் குரு பூர்ணிமா என்று ஆராதிக்கிறோம். குரு என்ற சப்தத்தின் பொருள்வெளியே இருக்கும் இருளை பௌர்ணமி எப்படி நீக்குகிறதோ பிரகாசம் வருகிறதோ அதுபோல நம்முடைய அகத்தினுடைய இருளை குரு என்கிற அந்த பூரணமான பௌர்ணமிதான் நீக்கும். அதனாலேயே குரு என்கிற பதத்தில் கு என்றால் இருட்டு என்றும் ரு என்றால் அதை நீக்குபவர் என்றும் அர்த்தமாகும். இன்னொன்று குருவையே அடைய வேண்டும். அங்கு அடைய வேண்டிய இன்னொரு பொருளே இல்லை எனலாம்.
(தொடரும்)

The post குரு தத்துவம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நான்கு நாமங்களை மறக்க வேண்டாம்