டெல்லி: கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நவம்பர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நவம்பர் 13-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏற்கனவே, வேட்பு மனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, 48 சட்டமன்ற தொகுதிகள், கேரளாவில் ஒரு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் ஒரு மக்களவை தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 14 சட்டசபை தொகுதகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டள்ளது. கேரளா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பவர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.
சமூக, கலாச்சார பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என அரசியல் கட்சிகள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 13 ஆம் தேதிக்கு பதிலாக 20 ஆம் தேதி நடைபெறும். அதே சமயம் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டசபை தொகுதி தேர்தல் முன்பு 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 13 ஆம் தேதியே நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
The post கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் appeared first on Dinakaran.