கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 7-11-2024
முன்னுரை
நரகாசுரனை அழித்து மக்களைக் காத்த நாள் தீபாவளி. (31.10.2024) சூரபத்மனை அழித்து மக்களைக் காத்த நாள் கந்த சஷ்டி. (7.11.2024) இரண்டும் இரண்டு அசுரர்களை அழித்த தினம்.அசுரன் என்பது தீமையை, தீய எண்ணங்களை, அந்த எண்ணங்களால் உருவாகும் செயல்களையும், அந்த செயல்கள் செய்வதற்குரிய சக்தி, ஆயுதம், வரம், உருவம் ஆகியவற்றைக் குறிக்கும். கண்ணன் அசுரனை அழித்துக் காத்தது தீபாவளியாகியது.
கந்தன் அசுரனை அழித்துக் காத்தது கந்த சஷ்டியாகியது. வியப்பு என்னவென்றால் இரண்டும் ஐப்பசியில் அடுத்தடுத்து அனுசரிக்கப்படுகிறது. ஐப்பசி துலாமாதம். சூரியன் சக்தி இழக்கும் மாதம். தெய்வ பலத்துடன் அந்த சக்தியை மனிதகுலம் பெறவே ஐப்பசியில் இந்த இரண்டு விரதங்களும் வருகின்றன. இந்த இதழ் தீபாவளியை ஓட்டி உங்கள் கையில் கிடைப்பதால் தீபாவளியில் ஆரம்பித்து கந்தசஷ்டி விழாக்களின் வழியாக நாம் நிறைவு செய்யும் வகையில் முத்துக்கள் முப்பது கட்டுரையை அனுபவிப்போம்.!
கந்த சஷ்டி
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக பக்தர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் 2.11.2024 அன்று தொடங்கி 8.11.2024 அன்று நிறைவு பெறும். ஆறுபடை வீடுகளில் மட்டும் அல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும், முருகன் சந்நதி உள்ள சிவாலயங்களிலும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பெறும். இந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
எப்படி விரதம் இருப்பது? என்ன சாப்பிடலாம்?
விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் இலகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். முழுமையாக தண்ணீர் கூடப் பருகாமல் தீவிர விரதம் இருப்பவர்கள் உண்டு.
அப்படி முடியாதவர்கள், கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சி வேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
யார் இந்த அசுரர்கள்? ஏன் சூரசம்ஹாரம்?
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்த புராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.கந்த புராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது.
ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும்.நமக்குள் இருக்கும் காம குரோதங்கள், ராக துவேஷங்கள் மறைய இறைவன் உதவுவான், அடுத்து நம்மை நாமே உணருவோம் என்று நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டவே இத்தினங்கள்.
அல்லவை போக்கி நல்லவை அருளல்
அசுரர்கள் என்பது வெளியிடத்தில் இல்லை. நம் உள்ளேயே இருக்கிறார்கள். பிறரைத் துன்பப்படுத்தும் சொற்களும் செயல்களும் அசுரத் தன்மையின் அடையாளங்கள்தான். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவதன் மூலம் இந்த அசுரத்தன்மைகள் சம்ஹாரம் செய்யப்படும். (அழிக்கப்படும்). இதுவே சூரசம்ஹாரம். சூரனை முருகன் சம்ஹாரம் செய்யவில்லை. அவன் ஆணவத்தை அழித்து, நெறி தவறியவனையும் ஆட்கொண்டு, வேலாகவும் மயிலாகவும் மாற்றி, முருகப் பெருமான் தன்னுடனேயே வைத்துக் கொண்டான்!
சஷ்டி விரதத்தில் என்ன படிக்கலாம்
கந்த சஷ்டியின்போது தொடர்ந்து “ஓம் சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை பாராயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, அருணகிரிநாதரின் திருப்புகழ், மற்றும் உள்ள முருகனின் பாராயண நூல்களை இயன்ற அளவு பாராயணம் செய்வது நல்லது இதில் கந்த சஷ்டி கவசத்தை பலரும் தொடர்ந்து பாராயணம் செய்வார்கள். கவசம் என்றால் பாதுகாப்பது, காப்பாற்றுவது என்று பொருள் கந்த சஷ்டி கவசம் நம்மை பல விதமான கஷ்டங்களில் இருந்தும் நோயிலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது இதைப் பாராயணம் செய்பவர்கள் இதன் சிறப்பை உணர்ந்து இருக்கின்றார்கள். முருகனின் அறுபடை வீட்டுக்கும் தனித்தனி கந்த சஷ்டி கவசம் இருக்கிறது.
சஷ்டி விரதத்தில் பிறந்தது கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசத்தை அருளிச் செய்தவர் ஸ்ரீதேவராய சுவாமிகள். ஸ்ரீதேவராய சுவாமிகள் சிறந்த முருக பக்தர். ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டாலும் அவர் நோய் தீரவில்லை. இனி கடலில் விழுந்து மாள்வோம் என்று நினைத்து திருச்செந்தூர் சென்றார். அங்கே கந்த சஷ்டி விழா நடந்துகொண்டிருந்தது. முருக பக்தரான தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி விரதம் இருந்து, சூரசம்ஹாரம் முடிந்தவுடன், முருகனின் திருவடியை அடையலாம் என்று முடிவு எடுத்தார்.
தினம் ஒரு படைவீடு கவசம்
ஆறு நாட்களும் தினத்துக்கு ஒன்றாக ஆறுபடை வீடுகளுக்கும் தனித் தனியாக ஆறு கவசங்களைப் பாடி முடிப்பது என்று முடிவு செய்தார் அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்கும் கவசங்களைப் பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்று வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஆறாவது நாள் பாடி முடித்தவுடன் வயிற்று வலி முழுமையாக நின்றுவிட்டது. இப்படிப் பிறந்தது தான் கந்த சஷ்டி கவசம். இதில் ஆறு கவசங்கள் உண்டு. இவை அனைத்துமே கந்த சஷ்டி கவசம் என்கிற பெயரோடு தான் இருக்கின்றன. அதில் முதல் கவசம்தான் திருச்செந்தூர் கவசம். அதில்தான்,
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
– என்று தொடங்குகின்றார். ஒவ்வொரு படை வீட்டுக்கு ஒவ்வொரு கவசம் இருந்தாலும் திருச்செந்தூர் கவசம் பிரபலமாகியது.
வேறு விதமாகவும் குறிப்பு உள்ளது
ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றார், தேவராய சுவாமிகள். மலையைச் சுற்றி உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர், பிச்சைக்காரர்கள் எனப் பலரும் அழுது அரற்று வது கண்டு மனம் வருந்தினார். ‘முருகா, நீ இருக்கும் இடத்தில் இத்தனை துன்பங்கள் இருக்கலாமா! இது உனக்கு அழகா! என் இறைவனே இவர்களின் துயர்களை உடனே ஓடிவந்து மாற்று’ என்று வேண்டினார்.
அன்று இரவு பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் உறங்கினார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பன் பிரசன்னமானார். ‘‘உன் எண்ணம் ஈடேற, உலகிலுள்ளோர் அனைவரும் ஓதி இன்புற்று வாழ ஒரு மந்திரத்தை செந்தமிழில் பாடு!’’ என்று ஆசி கூறி பழநியப்பன் மறைந்தார். உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். மடை திறந்த வெள்ளமாய் சஷ்டி கவசம் பிறந்தது. 238 அடிகளைக் கொண்ட இந்த கந்தர் சஷ்டி கவசம் பாடுவோருக்கு கவசமாக இருந்து எல்லா தொல்லைகளில் இருந்தும் காக்கும்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
சண்முகக் கவசம்
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தார் அப்படி ஒரு முறை பாராயணம் செய்யும்பொழுது அவரும் கவிஞர் என்பதால் தானும் முருகன் மீது இப்படி ஒரு கவசத்தை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். அப்படியே முருகன் மீது ஒரு கவசமும் பாடினார். அந்த கவசம் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் ஆறு
கவசங்களை உள்ளடக்கியது.
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.
என்பது இதில் உள்ள முதல் பாடல். இந்தப் பாடலைப்பிழை இல்லாமல், நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வந்தால் தீராத நோயையும் தீர்க்கக்கூடிய சக்தி படைத்தது. இது மெய், உயிர் இரண்டையும் கவசம் போல் இருந்து காப்பது. கந்த சஷ்டியில் சண்முக கவசமும் பாராயணம் செய்யலாம்.
முருகனுக்கு மூன்று மயில்கள்
மயிலாக நான் மாற வேண்டும். வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. சீர்காழி கோவிந்தராஜன் உருக்கமாகப் பாடிய முருகன் பாடல். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.
1. மந்திர மயில்.
2. தேவ மயில்
3. அசுர மயில்.
அம்மையப்பனிடம் இருந்து மாங்கனி பெறுவதற்காக உலகைச் சுற்றி வந்தது மந்திரமயில். சூரசம்ஹாரம் செய்யும் பொழுது இந்திரனே மயிலாக வந்தான். அதற்கு தேவமயில் என்று பெயர். சூரபத்மன் மாமரமாக வந்து எதிரிட்டபோது அவனைத் தொலைத்துப் பின் இரண்டாகப் பிளந்து, அதில் ஒரு பகுதியை மயிலாக ஏற்றுக் கொண்டான். அது அசுர மயில்.
காலாவதியாகாமல் காப்பாற்றும்
கந்த சஷ்டியின்போது தினம் அதிகாலை நீராடி திருநீறு அணிந்து பின் பூஜை செய்ய வேண்டும். பாழ் நெற்றியோடு பூஜை செய்யக்கூடாது. திருநீறு பூசும்போது சடாக்ஷர மந்திரம் ஓதி பூச வேண்டும். பழனியில் விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். யாத்திரிகர் ஒருவர் பழனியில் திருநீறு பொட்டலம் வாங்கினார் அந்தப் பொட்டலத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துவிட்டு, ‘‘இது எத்தனை நாள் பயன்படுத்தலாம்? இதற்கு காலாவதி தேதி இருக்கிறதா (Expiry Date)?’’ என்று கேட்டார். அப்பொழுது கடைக்காரர் சொன்னார். ‘‘ஐயா, நமக்குத்தான் காலாவதி தேதி இருக்கிறது. நாம் பூசும் திருநீறுக்கு காலாவதி தேதி கிடையாது. அது நாம் காலாவதியாகாமல் காப்பாற்றும், என்றார்.
திருமுருகாற்றுப்படை
அறுபடை வீடு கொண்ட திருமுருகனுக்கு முதலில் ஆற்றுப்படை பாடியவர் நக்கீரர். பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். ‘‘முருகாற்றுப்படை’’ எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
சஷ்டியின்போது பாராயணம் செய்யலாம்
கந்த சஷ்டியின் போது மாலையில் இந்த நூலை பாராயணம் செய்யலாம். அதன் மூலம் ஆறுபடை வீட்டிற்கும் சென்று முருகனை தரிசித்த பேறு நமக்குக் கிடைக்கும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர். பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்
சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சந்நதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நதியும் அமைந்துள்ளது. மிகப்பழமை வாய்ந்த இந்தத் தலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும்.
சூரசம்ஹார விழா 2.11.2024 அன்று தொடங்குகிறது. 6.11.2024 பஞ்சமி திதி அன்று மாலை 7.30 மணியளவில் தேரிலிருந்து இறங்கும் முருகப்பெருமான் நேராக அன்னை வேல் நெடுங்கண்ணி அம்மையிடம் சக்திவேல் பெறுகிறார். அப்போது முருகப்பெருமானுக்கு வியர்ப்பதை இப்போதும் காணலாம். அடுத்த நாள் (7.11.2024) தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாகக் கொண்டாடுகின்றனர். தொடர்ந்து 8.11.2024 அன்று தேவசேனை திருக்கல்யாணமும் 9.11.2024 அன்று வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும் சூரசம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது. அறுபடை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப்பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால் மற்ற தலங்களில் நடப்பது போல கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இங்கே நடைபெறுவது இல்லை. கந்த சஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது. ஆனால் திருச்செந்தூரில் கடற்கரையில் இந்த விழாதான் அதிமுக்கியம்.
இந்த ஆண்டு 7.11.2024 அன்று மாலை 4.15 மணி முதல் 6.00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மஹா சூரன், சிங்கமுகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும். வீரபாகு மற்றும் பாலசுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித்தனி தேர்களில் கொண்டு செல்லப்படும்.
சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும். இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள். அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிவப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு.இந்த சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும் இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர். கந்த சஷ்டி விரதமிருந்து இந்த சூரசம்ஹார விழாவை நினைத்தாலும் தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும். நல்வாழ்வு பிறக்கும்.
எஸ். கோகுலாச்சாரி
The post கந்தசஷ்டியை கொண்டாடுவோம் வாருங்கள்! appeared first on Dinakaran.