×

தனியார் பல்கலை விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், கடந்த 3 ஆண்டுகளாக குடும்பத்தினரை பிரிந்திருக்கும் மன உளைச்சலில் நேற்றிரவு ஒரு கல்லூரி மாணவர் 6வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் 3-வது தெரு, மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது உமர் (20). இவர், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஒரு தனியார் பல்கலைக்கழக விடுதியின் 5வது மாடியில் தங்கி, அங்குள்ள பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.டெக். சிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் துபாயில் தங்கியுள்ளனர். இதனால் முகமது உமர் குடும்பத்தை விட்டு பிரிந்து, கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிப்பதில் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது குடும்பத்தினரை பிரிந்திருந்த கல்லூரி மாணவர் முகமது உமருக்கு மனஉளைச்சல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றிரவு அந்த தனியார் பல்கலை விடுதியின் 6வது மாடிக்கு முகமது உமர் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் அங்கு தங்கியிருந்த சக மாணவ-மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எனினும், 6வது மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவர் முகமது உமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு முன் கல்லூரி மாணவர் முகமது உமர் எழுதிய உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், துபாயில் இருக்கும் தனது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சரிவர பேசாததால் கடும் மனஉளைச்சலில் இருந்த கல்லூரி மாணவர் முகமது உமர், அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post தனியார் பல்கலை விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக...