×

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது

* குடும்பம், குடும்பமாக வந்து பொழுதை போக்கினர், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று இரவு முதல் சென்னை திரும்ப திட்டம்

சென்னை: தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் நேற்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மட்டும் சொந்த ஊர்களுக்கு 15 லட்சம் பேர் புறப்பட்டு சென்றனர். இதனால், கடந்த 2 நாட்களாக சென்னையில் மக்கள் நடமாட்டம் என்பது மிக குறைவாக இருந்து வருவதை காண முடிகிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து விடுமுறையை கொண்டாட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகள், கோயில்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

சென்னையில் நேற்று காலை முதல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த கிளைமேட் மாலை வரை நீடித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால், மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது.

ஒவ்வொருவரும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து பொழுதை போக்கினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கே மேலே தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், இரவு நேரத்தில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் அதிக அளவில் குவிந்ததால் கடற்கரை, பூங்காக்கள் ஓரத்தில் உள்ள கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் கடற்கரை, பூங்காக்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு ரயில், பஸ், கார்களில் புறப்பட்டு சென்றவர்கள் நாளை இரவு முதல் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளனர். இதனால் நாளை இரவு புறப்படும் ரயில்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாக உள்ளது. இதனால், கடைசி நேரத்தில் அவர்கள் நாடுவது பஸ்களை தான். இதனால், நாளை இரவு இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை மறுநாள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவார்கள் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : Diwali ,Echo Marina ,Besantnagar Beach ,Parks ,Chennai ,Marina ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?