×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.62 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,964.50க்கு விற்பனை, கடந்த 5மாதத்தில் மட்டும் ரூ.156 உயர்வு

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.62 அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்துக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டன. அதில், தொடர்ந்து 8வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி, டெல்லியில் ரூ.803, மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829, சென்னையில் ரூ.818.50, சேலத்தில் ரூ.836.50 ஆக உள்ளது.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.62 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,903 என இருந்தநிலையில், ரூ.61.50 உயர்ந்து ரூ.1964.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1851.50 இருந்து ரூ.61.50 அதிகரித்து ரூ.1,913 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.62 உயர்ந்து ரூ.1,802 ஆகவும், மும்பையில் ரூ.62 உயர்ந்து ரூ.1,754.50, கொல்கத்தாவில் ரூ.61 உயர்ந்து ரூ.1911.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1646 ஆக இருந்தது. அதுவே தற்போது 5 மாதத்தில் ரூ.156 அதிகரித்து ரூ.1802 ஆக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விலையேற்றத்தால் உணவு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு சிலிண்டர் விலை உயர்வே காரணமாக அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் குறைந்து வந்தது.

அப்போது சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு எடுக்கவில்லை. தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையே ஏவுகணை தாக்குதல் சண்டை வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வர்த்தக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு ரூ.62 உயர்த்தியுள்ளது. வரும் மாதத்தில் விலையேற்றமே இருக்க வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.62 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,964.50க்கு விற்பனை, கடந்த 5மாதத்தில் மட்டும் ரூ.156 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Federation of Oil Companies ,Dinakaran ,
× RELATED வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,980.50க்கு விற்பனை