×

குடிநீருக்காக பயன்படுத்தும் ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?.. வைகையில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சங்கர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாய பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்படும் நிலையில், தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கு குடியிருப்போர் வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதை போல், அடிப்படை கடமைகளும் இருக்கின்றன. வைகை ஆற்றில் வாகனங்களை கழுவுகிறார்கள். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், நகர் பகுதிகளில் வைகை ஆற்றில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post குடிநீருக்காக பயன்படுத்தும் ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?.. வைகையில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : ICOURT BRANCH ,VIGA ,Madurai ,High Court ,Madurai Municipality ,Vaigai River ,Sankar ,Sivaganga District ,Manamadura ,Madurai Branch ,iCourt ,Vaiga ,Dinakaran ,
× RELATED சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க...