புதுடெல்லி: டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு 25 மடங்கு அதிகரித்ததாகவும், இதனால் மக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதற்காக கடந்த அக்டோபர் 14ம் தேதி டெல்லி அரசு அறிவிப்பில், டெல்லி நகரம் முழுவதும் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிய டெல்லிவாசிகள், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தனர்.
ஆங்காங்கே பட்டாசுகளும் தடையை மீறி விற்கப்பட்டன. தலைநகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தன. நேற்று மாலை 4 மணிக்கு எடுக்கப்பட்ட காற்றின் தரமானது மிகவும் மோசமான அளவாக 328 ஆக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த தீபாவளியில் பதிவான மிகவும் மோசமாக காற்றின் தரம் பதிவாகி உள்ளது. ஒரு கன மீட்டருக்கு 900 மைக்ரோகிராம்கள் வரை பதிவாகியுள்ளன.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2022ல் 312, 2021ல் 382, 2020ல் 414, 2019ல் 337, 2018ல் 281 ஆக இருந்ததுடன், கடந்த ஆண்டு 280 ஆக பதிவானது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தலைநகர் முழுவதும் 377 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பட்டாசு வெடிப்பதை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்றிரவு மட்டும் தடையின்றி தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஒரே புகைமூட்டமாக தலைநகரம் காணப்பட்டது.
சாலையோரம் வசிப்பவர்களும், பாதசாரிகளும், வாகனத்தில் செல்வோரும் பெரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். இன்று காலை 6 மணியளவில் எடுக்கப்பட்ட காற்றின் தரக் குறியீடு 370 ஆகப் பதிவாகி இருந்தது. இது மிகவும் மோசமான காற்று மாசு என்று கூறுகின்றனர். கடந்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக்கு குறியீடு 359 ஆக பதிவாகி உள்ளது.
டெல்லியின் காற்று மாசு 25 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தீயணைப்புத் துறைக்கு மொத்தம் 318 அழைப்புகள் வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தசரா பண்டிகையில் இருந்தே டெல்லியில் காற்று விஷமாக பரவி உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாகி உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
* தீபாவளி கொண்டாடிய 2 பேர் சுட்டுக் கொலை
தலைநகர் டெல்லியின் ஷஹ்தாரா பகுதியில் உள்ள ஃபர்ஷ் பஜாரில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 10 வயது குழந்தை காயமடைந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘ஆகாஷ் சர்மா (40), அவரது உறவினர் ரிஷப் சர்மா (16) ஆகியோர் தங்களது வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்கு வந்த இருவர், ஆகாஷ் சர்மாவையும், ரிஷ்ப் சர்மாவையும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
மேலும் ஆகாஷின் 10 வயது மகன் கிரிஷ் சர்மாவும் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஆகாஷ் மற்றும் ரிஷப் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூடு நடந்திருக்கு வாய்ப்புள்ளது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர்.
The post 377 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும் வீண்: டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு; காற்று மாசு 25 மடங்கு அதிகரித்ததால் கடும் மூச்சுத்திணறல் appeared first on Dinakaran.