×
Saravana Stores

ஆற்றுமணலை ஏற்றிவந்த 10 லாரிகள் சிறைபிடிப்பு

திருவொற்றியூர்: சென்னை எண்ணூரில் கடலுடன் கொசஸ்தலை ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் 150 கோடி மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின்போது பொக்லைன் இயந்திரம் மூலமாக கொசஸ்தலை ஆற்றை ஆழப்படுத்தி, அதிலிருந்து எடுக்கப்படும் மணலை அங்குள்ள கரையோரப் பகுதிகளில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள ஆற்றுமணலை இரவு நேரங்களில் பலர் லாரிகளில் எடுத்து செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு கொசஸ்தலை ஆற்றுமணலை கடத்தி வந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளை வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ் தலைமையில் அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் லாரி டிரைவர்களிடம் ஆற்று மணலை ஏற்றி செல்வதற்கு அனுமதி உள்ளதா என மக்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எண்ணூர், காமராஜர் சாலையில் மக்கள் கூடியதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அங்கு ஆற்றுமணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். டிரைவர்கள், நீர்வளத்துறை அனுமதியுடன் முகத்துவாரத்தில் எடுக்கப்படும் ஆற்றுமணலை பெருங்குடிக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

அதற்கான உத்தரவை காண்பிக்கும்படி நீர்வளத்துறை அதிகாரியிடம் தாசில்தார் சகாயராணி வலியுறுத்தினார். அதற்கு நீர்வளத்துறை அதிகாரி, சென்னை மாவட்ட கலெக்டர் மூலமாக திருவொற்றியூர் வருவாய் துறையினருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆற்றுமணலை எடுத்து செல்வதற்கான சரியான உத்தரவையும், பெருங்குடியில் மணல் கொட்டப்படும் புகைப்படத்தையும் நேரில் எடுத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரியிடம் தாசில்தார் சகாயராணி அறிவுறுத்தினர். பின்னர் ஆற்றுமணல் ஏற்றி சென்ற லாரிகளின் பதிவெண்களை குறித்துக்கொண்டு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரிய மணல், கரையோரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அவை பருவமழையின்போது கரைந்து மீண்டும் முகத்துவாரப் பகுதியில் தேங்கிவிடும். இவற்றை தவிர்க்க, துணை முதல்வர் அறிவுறுத்தலின்பேரில் தற்போது அந்த மணலை கொடுங்கையூர், பெருங்குடி பகுதிகளில் தாழ்வான அரசு இடங்களில் நிரப்பப்படுகிறது. இந்த மணலை எடுப்பதற்கு சென்னை மாவட்ட கலெக்டரின் முறையான அனுமதியும் பெறப்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆற்றுமணலை ஏற்றிவந்த 10 லாரிகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Chennai ,Muatuwara ,Kosastala River ,
× RELATED வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர்...