×
Saravana Stores

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை சரிவு: வெளிமாநிலங்களுக்கான தேவை இருந்தும் பலன் இல்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னந்தோப்புகளில் இளநீர் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை சரிய தொடங்கி உள்ளது. வெளிமாநிலங்ளுக்கான தேவை அதிகரித்தபோதிலும் விலை சரிவை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் இருந்து இளநீர் அறுவடை செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பச்சை இளநீர், செவ்விளநீர் என தனித்தனியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்திருந்தாலும், இளநீர் விளைச்சல் குறைவாகவே இருந்தது.

இதனால் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை குறைவானதுடன், இளநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதன் காரணமாக விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக கடந்த மாதம் துவக்கத்தில் பண்ணை விலை ஒரு இளநீர் ரூ.38 முதல் ரூ.40வரை இருந்தது. வெளியிடங்களில் சில்லரை விலைக்கு ஒரு இளநீர் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் இந்த மாதம் துவக்கத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இளநீர் விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆனால் அதே வேளையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் இளநீர் நுகர்வு குறைந்து வருகின்றது.

வெளி மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரித்து விற்பனைக்கு அனுப்புவது அதிகரிக்க தொடங்கியபோதிலும் விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து 2.50 லட்சம் வரையிலான இளநீர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வியாபாரி சம்பத்குமார் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததன் பலனாக தற்போது இளநீர் விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 2 வாரமாக இளநீர் அறுவடை அதிகரித்துள்ளது. ஆனால் மழையின் காரணமாக நுகர்வு குறையத்தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை, பஞ்சாப், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கூடுதலாக இளநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் விலை சரிவை தடுக்க முடியவில்லை.

தென்னந்தோப்புகளில் இருந்து நேரடி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.33 முதல் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. அவை வெளி மாநிலங்களில் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் முதல் 2.75 லட்சம் வரையிலான இளநீர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது’’ என்றார்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை சரிவு: வெளிமாநிலங்களுக்கான தேவை இருந்தும் பலன் இல்லை appeared first on Dinakaran.

Tags : Pollachi periphery ,Pollachi ,Gowai ,Pollachchi ,Anaimalai ,Kunathukadavu ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற...