×
Saravana Stores

வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்: ராகுல், சோனியா, மூத்த தலைவர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ரோட் ஷோவுக்குப் பின்னர் பிரியங்கா காந்தி நேற்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இது இவரது முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரியும், பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாசும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் இரவு வயநாடு வந்தார். அவருடன் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் வத்ரா ஆகியோரும் வந்தனர். அன்று இரவு இவர்கள் வயநாடு மாவட்டம் பத்தேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தனி விமானம் மூலம் கண்ணூர் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டுக்கு வந்தனர். நேற்று காலை 11 மணியளவில் கல்பெட்டா புதிய பஸ்நிலையம் அருகே இருந்து பிரமாண்ட ரோட் ஷோ புறப்பட்டது.

திறந்த வேனில் பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் உள்பட தலைவர்கள் சென்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இந்த ரோட்ஷோவில் கலந்து கொண்டனர். சாலையில் இருபுறங்களிலும் கூடியிருந்த பொதுமக்களை பார்த்து ராகுல், பிரியங்கா உற்சாகமாக கை அசைத்தனர். ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பின் மதியம் 1.20 மணியளவில் வயநாடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகஸ்ரீயிடம் பிரியங்கா காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வத்ரா, கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சாதிக் அலி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதன்பின்னர் பிரியங்கா காந்தி, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள புத்துமலை பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

* வயநாட்டுக்கு இனி 2 எம்பிக்கள் ராகுல் காந்தி பேச்சு
கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது: வயநாட்டுக்கு இனி 2 எம்பிக்கள் இருப்பார்கள். பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் அவருடன் சேர்ந்து நானும் வயநாடு தொகுதி மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அறிவிக்கப்படாத எம்பியாக போராடுவேன். வயநாடு மக்களை பிரியங்கா தன்னுடைய குடும்பமாகத்தான் கருதுகிறார். தன்னுடைய தாயை கவனித்தது போல உங்களையும் அவர் பார்த்துக் கொள்வார். இவ்வாறு அவர் பேசினார்.

* மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்கள்
வயநாடு பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: நான் கடந்த 35 வருடங்களாக தந்தை ராஜிவ் காந்தி, தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி உள்பட பலருக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். இப்போதுதான் எனக்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன். நம் நாடு தற்போது மிக மோசமான காலகட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு எதிராக தற்போது ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதை நாம் தடுத்தே ஆக வேண்டும் என்றார்.

* பிரியங்கா காந்தி சொத்து மதிப்பு ரூ.12 கோடி
பிரியங்கா காந்தி சொத்து விவரம் வருமாறு: நிலம், வீடு என மொத்தம் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ரூ.4.24 கோடி பணம் 3 வங்கிகள், மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.29.55 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் உள்ளன. இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் ரூ.5.63 கோடி மதிப்பில் வீடு . ரூ.2.10 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலம் உள்ளது. 2004 மாடல் ஹோண்டா சிஆர்வி கார் . ரூ.15.75 லட்சம் கடனும், கைவசம் 52 ஆயிரம் ரூபாயும் உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் மூன்று வழக்குகள் உள்ளன. கணவர் ராபர்ட் வத்ராவுக்கு ரூ.37.91 கோடி முதலீடு உள்ளது.

* ராணுவ வீரரின் வீட்டுக்கு திடீர் விசிட்
ரிசார்ட்டுக்கு நேற்று முன்தினம் இரவு காரில் செல்லும் வழியில் ஏராளமானோர் சாலை ஓரத்தில் நின்று பிரியங்கா காந்தி வருவதை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் காரை நிறுத்த சொன்ன பிரியங்கா காரிலிருந்து இறங்கி அங்கு நின்றவர்களிடம் பேசினார். அப்போது அங்கிருந்த ராணுவ வீரரான பினோய், தனது தாய் திரேசியாவுக்கு பிரியங்காவை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும், ஆனால் அவருக்கு காலில் பிரச்னை இருப்பதால் வெளியே வரமுடியவில்லை என்றும் கூறினார். திரேசியாவை பார்க்க நான் வீட்டுக்கு வருகிறேன் என்று பிரியங்கா காந்தி அவரிடம் கூறினார். வேட்பு மனு தாக்கல் முடிந்து வருவதாக முதலில் அவர் கூறினார். பின்னர் இப்போதே வருவதாக கூறிவிட்டு திரேசியாவின் வீட்டுக்கு சென்றார். பிரியங்காவைப் பார்த்ததும் திரேசியா பரவசமடைந்தார். உடனே பிரியங்காவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். வீட்டில் இருந்த அனைவரிடமும் பேசிவிட்டு 15 நிமிடங்களுக்கு பிறகு தான் பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்: ராகுல், சோனியா, மூத்த தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Grand Road Show ,Wayanad ,Rahul ,Sonia ,Thiruvananthapuram ,Congress ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Mallikarjuna Kharge ,Siddaramaiah ,Rahul Gandhi… ,Dinakaran ,
× RELATED வயநாடு மக்கள் என் இதயத்தில்...