×
Saravana Stores

வங்காள விரிகுடாவில் இன்று டானா புயல் உருவாகிறது: ஒடிசா அருகே நாளை கரையை கடக்கும்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. அது இன்று புயலாக மாறி தீவிரம் அடைய தொடங்கும். கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.

அது மேலும் வலுப்பெற்று அதே பகுதியில் ஒடிசாவின் பாரதீப் பகுதியில் இருந்து தென்கிழக்கே சுமார் 700 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தெற்கு-தென்கிழக்கே 750 கி.மீ தொலைவிலும், வங்க தேசத்தின் கெபுபராவுக்கு தெற்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும் நேற்று மையம் கொண்டது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23ம் தேதி) கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வடமேற்கு நோக்கி நகரும் போது, ​​தீவிரம் அடைந்து வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

24ம் தேதி இரவு, 25ம் தேதி அதிகாலையில் ஒரு கடுமையான சூறாவளி புயலாக (டானா) மாறும். பின்னர் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்கும். காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் வீசும். கரையை கடக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றும், குறிப்பாக, 24 மற்றும் 25ம் தேதிகளில் கடுமையான காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் 27ம் தேதி வரை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும், 23, 24, 25ம் தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகும் நிகழ்வின் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் புயல் தூரத்தை காட்டும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வங்காள விரிகுடாவில் இன்று டானா புயல் உருவாகிறது: ஒடிசா அருகே நாளை கரையை கடக்கும் appeared first on Dinakaran.

Tags : of Bengal ,Odisha ,Chennai ,Bay of Bengal ,
× RELATED வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த...