×
Saravana Stores

திருவண்ணாமலை அருகே 57 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை: 171 நிறுவனங்கள் தொடங்க மனைகள் ஒதுக்கீடு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ெதாழில் நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், தொழில் தொடங்க ஆர்வமுள்ள சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) சார்பில், மாநிலம் முழுவதும் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்க அரசு உத்தரவிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை – செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கோளாப்பாடி பகுதியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) தொழிற்பேட்டை சுமார் 57.181 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மொத்தம் 171 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கும் வகையில், தொழில் மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி – பெங்களூரு செல்லும் பிரதான சாலையில், திருவண்ணாமலை மற்றும் செங்கம் இடையே இந்த சிட்கோ தொழிற்பேட்டை அமைந்திருப்பது, போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வசதிக்கு உகந்ததாகவும் அமைந்திருக்கிறது.

இந்நிலையில், சிட்கோ தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள 171 தொழில்மனைகளில், இதுவரை 68 தொழில் மனைகள் புதிததாக தொடங்கும் சிறு, குறு தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 103 தொழில் மனைகளை தற்போது ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட சிட்கோ மேலாளர் இசக்கிராஜன் தெரிவித்ததாவது: பெரியகோளப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டையில் 103 காலி தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

புதிதாக தொழில் தொடங்க, தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்குவோர், இரண்டு ஆண்டுகளில் தங்களின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட எந்தவிதமான தொழில்களையும் தொடங்கலாம்.  பெரியகோளப்பாடி பகுதியில் உள்ள சிட்கோ காலி மனைகளை நேரில் பார்வையிட்டு, தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலிமனைகளை தேர்வு செய்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, திருவண்ணாமலையில் உள்ள சிட்கோ கிளை அலுவலத்தை 9445006558 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை அருகே 57 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை: 171 நிறுவனங்கள் தொடங்க மனைகள் ஒதுக்கீடு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CITCO industrial ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Chipcot ,Industrial Park ,Seiyaru ,Thiruvannamalai district ,Citco Industrial Estate ,Dinakaran ,
× RELATED மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்...