×
Saravana Stores

திருவேற்காட்டில் 2வது நாளாக ஏரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி: மக்கள் சாலை மறியல்

பூந்தமல்லி: திருவேற்காடு கோலடி ஏரியில் இன்று காலை 2வது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 169 ஏக்கர் பரப்பளவில் கோலடி ஏரி உள்ளது.

தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக, கோலடி ஏரியின் பரப்பளவு 112 ஏக்கராக சுருங்கியுள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றுவதற்கு பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, கோலடி ஏரிப்பகுதியில் நேற்று வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அங்கு கோலடி ஏரியை ஆக்கிரமித்து புதிதாக 25 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இந்நிலையில், கோலடி ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்ட 7 கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் புதிய கட்டிடங்களை நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறையினர் இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு, முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றும் பணியை இன்று காலை 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் துவக்கினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களை வெளியேற்றக்கூடாது என்று அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், புதிதாக கட்டப்பட்ட 20 கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, அங்கு கோலடி ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

The post திருவேற்காட்டில் 2வது நாளாக ஏரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி: மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thiruvekkad ,Poontamalli ,Koladi Lake, Tiruvekadu ,Tiruvekkadu… ,Tiruvekkadu ,
× RELATED எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு