×
Saravana Stores

நாளை புதிய காற்றழுத்தம் உருவாகிறது; 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மத்திய அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தும் உருவாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், மத்திய அந்தமான் கடல் பகுதியில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய வங்கக்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதவிர, வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக நாளை மற்றும் 24ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது. அத்துடன் 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்துள்ளது. காசிமேடு, ராயபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், எழும்பூர், வேளச்சேரி மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக பகுதிகளிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் தினமும் இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அக்டோபர் மாதத்தில் அதிகமழை பெய்து 350 மி.மீட்டரை கடந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 150 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 70 சதவீதம் அதிகம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

The post நாளை புதிய காற்றழுத்தம் உருவாகிறது; 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,CHENNAI ,Indian Meteorological Department ,Central Andaman Sea region ,Northeast ,Tamil Nadu ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...