×
Saravana Stores

திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் பக்தர்கள் புனித நீராடினர்


மயிலாடுதுறை: ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமமென்று புராணங்களில் கூறப்படுகிறது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை இப்புண்ணிய நதிக்கரையில் 3 இடங்கள் மிக விசேஷமான தீர்த்த கட்டங்கள் ஆகும். இதில் முதலாவது திருப்பராய்த்துறை, 2வது கும்பகோணம், 3வது மயிலாடுதுறை. ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறை துலாகட்டத்திலும் நீராடி அங்குள்ள சிவமூர்த்திகளை வழிபடுவோருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இன்று(18ம் தேதி) ஐப்பசி துலா மாத பிறந்தது. ஐப்பசி முதல் முழுக்கையொட்டி திருப்பராய்த்துறை துலாகட்டத்தில் புனித நீராடல் பெருவிழா நடந்தது.

ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடினால் இந்த பலன் கிடைக்கும் என்பதால் திருப்பராய்த்துறை, ரங்கம் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரைகளில் பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதல் புனித நீராடி வருகின்றனர். இதையொட்டி திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து காலை புறப்பட்டு காவிரியை சென்டைந்தார். அங்கு அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அதன்பின்னர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துலா ஸ்நானம் எனப்படும் புண்ணிய நீராடுதல் பெருவிழாவில் திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளானோர் திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதேபோல், மயிலாடுதுறையில் மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. அங்கே சிவலிங்கத்தில் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

அன்னையானவள் மயில் உருகொண்டு சிவலிங்கத்தைப் பூஜித்த பெருஞ்சிறப்பு உடையது. பெரியகோயிலின் வடபுறத்தில் உள்ள துலாக்கட்டக் காவிரியில் கங்கை உட்பட அனைத்து புண்ணிய நதிகளும் இங்குவந்து பாவங்களை போக்கிக்கொண்டதால் இங்கே புனித நீராடுவது இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் விழா நடைபெற்று இறுதிநாளன்று பக்தர்கள் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் குவிந்து புனித நீராடினர். பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீராடினர். நவம்பர் 15ம் தேதி அன்று கடைமுழுக்கு நடைபெறும்.

The post திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் பக்தர்கள் புனித நீராடினர் appeared first on Dinakaran.

Tags : Thiruparaithurai ,Tulagatam ,Libra ,Ganges ,Kotak ,Poombukar ,Dulasnanam ,Tiruparaithurai ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே...