×

நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க குறைந்த வட்டியில் மானியத்துடன் ரொக்கத்தொகை கடன்

 

பெரம்பலூர், அக்.18: பெரம்பலூர் மாவட்ட நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு- குறைந்த வட்டியில் மானியத்துடன் கிரையத்தொகை கடனாக வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களை ஊக்கு வித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு, தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூகப் பொருளாதார நிலையில், மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ5.லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுகட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாகப் பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகிறது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க குறைந்த வட்டியில் மானியத்துடன் ரொக்கத்தொகை கடன் appeared first on Dinakaran.

Tags : Landless ,Adi ,Perambalur ,Perambalur District ,Collector ,Grace Bachau ,Adhi ,Dravidas ,Dravidians ,Dinakaran ,
× RELATED ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல...