×

ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கு பாஜ பிரமுகரின் மேலாளருக்கு ஜாமீன் வழங்க கவுதமி எதிர்ப்பு

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கில் ஏமாற்றிய பாஜ பிரமுகரின் மேலாளருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியரும், பாஜ பிரமுகருமான அழகப்பன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் செபி நிறுவனம் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்த 64 ஏக்கர் நிலத்தை, அழகப்பன் வாங்கிக் கொடுத்து ரூ.3.16 கோடி முறைகேடு செய்ததாகவும், இவ்வழக்கில் அழகப்பன், இவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன், புரோக்கர் நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் ஜே.எம்.எண்.2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் பாஜ பிரமுகர் அழகப்பனின் மேலாளரான மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ரமேஷ் சங்கர் சோனாய் சிறையில் உள்ளார். இவரது ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கவுதமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இவ்வழக்கில் மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரமேஷ் சங்கர் சோனாய், எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதித்துறை நடுவர் பிரபாகரன், இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என உத்தரவிட்டார்.

* நியாயம் கிடைக்க போராடுவேன்
நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு நடந்த அநீதிக்காக போராடி வருகிறேன். இதற்காக ஒத்துழைப்பு தரும் அனைவருக்கும் நன்றி. இந்த வழக்கை விசாரிக்கும் போது எல்லா இடங்களிலும் தவறு நடந்துள்ளது தெரிய வருகிறது. அதனால் வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எனக்கு நியாயம் கிடைக்க கடைசி வரை போராடுவேன் என சபதம் ஏற்கிறேன்’’ என்றார்.

The post ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கு பாஜ பிரமுகரின் மேலாளருக்கு ஜாமீன் வழங்க கவுதமி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Gautami ,BJP ,Ramanathapuram ,Gauthami ,Karaikudi ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED நடிகை கவுதமியிடம் நில மோசடி பாஜ பிரமுகரின் மேலாளர் கைது