×

இசிஆரில் செல்லும் மக்களுக்கு குட் நியூஸ் புதுச்சேரி-கடலூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 6 வழிச்சாலை: மரக்காணம் முதல் கூனிமேடு வரை விரிவாக்கம்

மரக்காணம்: புதுச்சேரி-கடலூர் இடையே நெரிசலை குறைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மரக்காணம் முதல் கூனிமேடு வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை மூலம் கடலூருக்கு புதுச்சேரிக்குள் செல்லாமல் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக விரைவாக செல்ல முடியும். இதனால் புதுச்சேரி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துகளும் குறைக்கப்படும்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கடற்கரை சாலை தரமானதாக அமைக்கப்பட்டது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய பெரும்பாலான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்றது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் வாகன நெரிசலும் நாளுக்குநாள் அதிகரித்தது. மேலும் இந்த சாலையில் புதுவையில் இருந்து மகாபலிபுரம் வரையில் பல இடங்களில் வளைவுகள் இருந்தது.

இதுபோன்ற வளைவுகள் மற்றும் வாகன நெரிசல்களால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் நிகழந்தன. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வளைவுகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருந்த மகாபலிபுரம் முதல் புதுவை மாநிலம் வரையிலான இசிஆர் சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடந்த 2016ம் ஆண்டு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இந்த சாலைக்கு ‘NH 133 அழகு’ என தேசிய நெடுஞ்சாலை துறை பெயரிட்டு அங்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கான இடங்களையும் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தியது. மேலும் சாலை விரிவாக்கம் தொடர்பாக மகாபலிபுரம் முதல் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் வரையில் முதல் கட்டப்பணிகளும், முகையூர் முதல் மரக்காணம் வரை 2ம் கட்ட பணிகளும், மரக்காணம் முதல் புதுவையின் அரியூர் வரையில் 3ம் கட்ட பணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பே முதல்கட்ட பணிகள் தொடங்கின.

முகையூர் முதல் மரக்காணம் வரையிலான இரண்டாம் கட்ட பணிக்கான வேலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் நான்கு வழி சாலைக்கான உயர் மட்ட மேம்பாலம் அமைத்தல், மற்றும் முக்கிய கிராமங்களுக்கு இடையில் சாலையின் மத்தியில் மேம்பாலம் கட்டுதல், 4வழி சாலை அமைத்தல் மற்றும் 4வழி சாலையின் இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

மரக்காணம் பகுதியில் 40 சதவீதம் வரையில் முடிந்த நிலையில் மரக்காணம் முதல் புதுவை மாநிலத்துக்கு உட்பட்ட அரியூர் வரை 46 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கூனிமேட்டில் இருந்து அரியூர் வரை 31 கி.மீ தூரத்துக்கு 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய இசிஆர் சாலை வழியாக 4 வழி சாலை செல்லாமல் கூனி மேட்டின் மேற்கு பகுதியில் இருந்து அரியூர் வரை 31 கி.மீ. தூரத்திற்கு 6 வழி பசுமை சாலை அமைப்பற்கான இடங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்த சாலை அதிவேக பறக்கும் சாலையாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லலாம். இந்த பறக்கும் வழி சாலை செல்லும் பகுதியில் கிராமப்பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களோ அல்லது விபத்துக்களை ஏற்படுத்த கூடிய கால்நடைகள் சாலையின் குறுக்கே செல்ல முடியாத வகையில் சாலையின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேநேரம் கூனிமேடு முதல் அரியூர் வரை 31 கி.மீ. தூரத்திற்கு 6 வழி சாலை அமைக்கும் பணி முடிந்தால் புதுவை நகருக்குள் வாகன நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். தற்போது கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் இசிஆர் வழியாக வரும் வாகனங்கள் புதுவை நகருக்குள் சென்றுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த 6 வழி சாலை முடிந்தால் அரியூர் வழியாக செல்லும் வாகனங்கள் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படும். இதன் மூலம் புதுவை நகருக்குள் செல்லாமல் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்லலாம்.

அதேபோல், இந்த சாலை அமைக்கப்படும் பகுதியில் இருந்து மயிலம் வழியாக 15 கிலோ மீட்டருக்குள் திண்டிவனம் பகுதிக்கு செல்ல முடியும். சென்னை மற்றும் மரக்காணம் மார்க்கமாக விழுப்புரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மிக விரைவாக செல்ல முடியும். இதேபோல் இந்த சாலை வழியாக மரக்காணத்தில் இருந்து திண்டிவனத்திற்கு அதிவேகமாக செல்ல முடியும். இந்த சாலையால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், பயண நேரம் குறைக்கப்படுவதுடன் விபத்துகளும் தவிர்க்கப்படும்.

The post இசிஆரில் செல்லும் மக்களுக்கு குட் நியூஸ் புதுச்சேரி-கடலூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 6 வழிச்சாலை: மரக்காணம் முதல் கூனிமேடு வரை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : ECR ,lane ,Puducherry-Cudalur ,Marakanam ,Koonimedu ,Cuddalore ,Villupuram-Nagapatnam National Highway ,Puducherry ,Puducherry-Cuddalore ,Dinakaran ,
× RELATED தனியார் ரிசாட்டில் உள்ள நீச்சல்...