×

எந்த அடிப்படையில் அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளருக்கு ஐகோர்ட் கேள்வி

* எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என பதில் தரவும் நீதிபதி உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்று விளக்கமளிக்குமாறு அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடும்போது, அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் கருத்துகள் தெரிவிக்கவில்லை என்றார். அதற்கு பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால் கட்சி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

அதற்கு பி.வில்சன், அரசியல் கட்சி சார்பில் வழக்கு தொடர்வதாக இருந்தால் தலைவரோ, பொதுச்செயலாளரோ தான் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அவதூறு வழக்கு தொடர்வதற்கு எந்த அடிப்படையில் அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும் வழக்கு தொடரவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது. அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எப்படி அவதூறாகும் என்றார். இதை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சபாநாயகர் குறிப்பிட்ட சம்பவம் நடந்தபோது பாபு முருகவேல் அதிமுகவில் இல்லை.

அப்படி இருக்கும்போது அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்து சபாநாயகர் அப்பாவுவின் மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பாபு முருகவேல் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

The post எந்த அடிப்படையில் அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளருக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIADMK Advocate Team ,Joint Secretary ,ICourt ,Chennai ,AIADMK ,Appavu ,DMK ,Jayalalithaa ,Joint ,Dinakaran ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா