×

மழையால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்கும் அபாயம்

 

ஊட்டி, அக். 15: ஊட்டியில் தினமும் மழை பெய்து வரும் நிலையில் இரண்டாம் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை இரு மாதங்கள் கொட்டி தீர்ப்பது வாடிக்கை. இந்நிலையில், இம்முறை தென் மேற்கு பருவமழை கடந்த ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை பெய்தது.

எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை என்ற போதிலும் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மலர் அலங்காரங்களை தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால், தற்போது ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்ய துவங்கி உள்ளது. இதனால், பூங்காவில் உள்ள மலர் செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேரிகோல்டு, டேலியா போன்ற மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மழையால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி – சோலூர் சாலையில் சாலையோரத்தில்...