×

குப்பைகள் இல்லா நகரமாக மாறும் சென்னை

சென்னை மாநகராட்சியை குப்பை இல்லா நகரமாக மாற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவி ஏற்ற பிறகு, கடந்த 3 மாதங்களில் மட்டும் பல்வேறு திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக்கியுள்ளது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை மேம்பாட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, துப்புரவு பணிகளை மேம்படுத்தும் விதமாக காலை நேரத்தைவிட இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன இயக்கம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு சென்னை மாநகரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜூலை 22ம்தேதி முதல் 15 நாட்கள் இரவு நேரங்களில் அதிகளவில் பேருந்து வழித்தட சாலைகள், நெடுஞ்சாலைகளை தூய்மைப்படுத்தும் விதமாக இரவு நேர தூய்மை பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கென்று பிரத்யேகமாக இரவு நேர துப்புரவு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு 4532 எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள், 810 துப்புரவு வாகனங்கள், 210 காம்பாக்டர் வாகனங்கள், 200 இயந்திர பெருக்கி வாகனங்கள், 363 டிப்பர்கள், 287 பாப்காட் இயந்திரங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு சாலைகளில் தேங்கியிருந்த 718 டன் குப்பைகள் மற்றும் 5774 டன் கட்டிட கழிவு மற்றும் தூசி மண் அகற்றப்பட்டது.

மொத்தமாக, 332 எணிக்கையிலான பேருந்து வழித்தட சாலைகள், நெடுஞ்சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு தற்போது சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், உட்புற சாலைகளில் ஆகஸ்ட் 8ம்தேதி முதல் கடந்த மாதம் 14ம்தேதி வரையிலான நாட்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, முன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அந்தந்த மண்டலங்களில் உள்ள உட்புற சாலைகளை தூய்மைபடுத்துவதற்கு முன் நாளில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இச்சாலைகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் சாலைகளில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு நிறுத்தும் வாகனங்கள் அப்புறப்படுத்தவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.

மேலும், உட்புற சாலைகளில் ஆகஸ்ட் 5ம்தேதி முதல் கடந்த மாதம் 14ம்தேதி வரையிலான நாட்களுக்கு தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, முன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களில் உட்புற சாலைகளில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 27053 எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள், 4292 துப்புரவு வாகனங்கள், 742 காம்பாக்டர் வாகனங்கள், 1206 டிப்பர்கள் 674 பாப்காட் இயந்திரங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 6082 எண்ணிக்கையிலான உட்புற சாலைகளில் தேங்கியிருந்த 2,250 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் 7,139 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 19ம்தேதி முதல் கடந்த மாதம் 14ம்தேதி வரை பேருந்து வழித்தட சாலைகள், நெடுஞ்சாலைகளில் மீண்டும் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 3571 எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர் 688 துப்புறவு வாகனங்கள், 209 காம்பாக்டர் வாகனங்கள், 149 இயந்திர பெருக்கி வாகனங்கள், 243 டிப்பர்கள், 179 பாப்காட் இயந்திரங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு சாலைகளில் தேங்கியிருந்த 461 டன் குப்பைகள் மற்றும் 1582 டன் கட்டிட கழிவு அகற்றப்பட்டன. மொத்தமாக 254 எண்ணிக்கையிலான 313 கி.மீட்டர் நீளமுள்ள பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டது.

மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3வது கட்டமாக கடந்த 1ம்தேதி முதல் 10ம்தேதி வரை மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நோக்கில் பேருந்து வழித்தட சாலைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள 3401 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால்வாய் துவாரங்கள் மற்றும் வண்டல் பிடி குழிகள் மற்றும் 1935 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் குழாய்கள் தூய்மைப்படுத்தவும் மற்றும் 262 எண்ணிக்கையிலான நடைபாதைகளில் உள்ள குப்பை, கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்கள், விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தவும் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்படப்பட்டது.

2537 எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் 955 எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு சுமார் 208டன் குப்பைகள் மற்றும் 1025டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. மின் மாற்றி மற்றும் மின் கம்பங்களை சுற்றியுள்ள குப்பைகள் கட்டட கழிவுகள் மற்றும் பயனற்ற உபரி மின்கம்பிகளை அகற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு, மின்சாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து இவ்விடங்களை தூய்மைபடுத்தும் பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மின்சாரத் துறை அலுவலர்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, மின்சாரத்துறை அலுவலர்களின் முன்னிலையில் சுமார் 2324 எண்ணிக்கையிலான இடங்களில் மின் மாற்றி மற்றும் மின் கம்பங்களை சுற்றியுள்ள 133 டன் குப்பைகள் மற்றும் 402 டன் கட்டட கழிவுகள் மற்றும் பயனற்ற உபரி மின்கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்டமாக, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 1360 எண்ணிக்கையிலான பேருந்து நிழற்குடைகளை தூய்மைபடுத்தும் வகையில், அதனை சுற்றியுள்ள குப்பைகள் கட்ட கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்ற திட்டமிடப்பட்டது. ஆகஸ்ட் 21ம்தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 110 டன் குப்பைகள் மற்றும் 70 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டது. மேலும், 4300 சுவரொட்டிகள் மற்றும் 47 பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டு அனைத்து பேருந்து நிழற்குடைகளும் தூய்மைபடுத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 871 எண்ணிக்கையிலான பூங்காக்களை தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டு, கடந்த மாதம் 6ம்தேதி காலை காலை 7.30 முதல் மாலை 5 மணி வரை பெருமளவில் பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 208 டன் குப்பைகள் மற்றும் 50 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், 620 எண்ணிக்கையிலான அதிகப்படியாக வளர்ந்த மரக்கிளைகள் மரங்களிலிருந்து கழித்து சீரமைக்கப்பட்டு அனைத்து பூங்காக்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.

அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவதை தவிர்க்கும் வகையில் கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை சேகரித்து கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, உரிய விதிமுறைகளை பின்பற்றி சென்னை மாநராட்சியின் அங்கீகாரத்திற்குட்பட்டு அத்தகைய கழிவுகளை சென்னை மாநகராட்சியால் 15 மண்டலங்களில் இதற்கென்று பிரத்தியேகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு எந்தவிதமான கட்டணமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள கட்டிட கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவுகளை சேகரித்து கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கான இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்களாக பதிவு செய்ய இதற்கென பிரத்யேகமாக இணைய தள வசதி மூலம் “https://gccservices.chennaicorporation.gov.in/volunteer/wastecollectors” பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் பொது இடங்களில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், இந்த வசதிகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்த இடர்பாடுகளை களைந்திடும் வகையில் இத்திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சென்னை மாநகராட்சியின் தகவல் உதவி மையத்தை “1913” என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சென்னை மாநகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பைகள், கட்டட கழிவுகளை கொட்டுவது மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், கசடுகளை லாரிகள் மூலம் நீர்நிலைகள், பொது இடங்களில் விடுவது ஆகிய விதிமீறல்களை தடுக்கவும் மற்றும் இதை திறம்பட கண்காணித்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உதவி செயற் பொறியாளர் துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் திடக்கழிவு மேலான்மைக்கான பிரத்தியேக அமலாக்க குழு ஒவ்வொரு மண்டலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் மத்தியில் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திருத்தப்பட்ட அபராதத் தொகையின்படி உடன் அபராதம் விதித்தல், வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்தல் போன்ற அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 500 எண்ணிக்கையில் அனைத்து இணையவழி கட்டண வசதிகளுடன் கூடிய கையடக்க அபராதம் விதிக்கும் இயந்திரங்கள் இக்குழுவின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்களும் 1913 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக போக்குவரத்துக்கு இடையூறாக பழுதடைந்த, இயக்கப்படாத நிலையில் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டு, 2447 எண்ணிக்கையிலான வாகனங்கள் கண்டறியப்பட்டு 2440 எண்ணிக்கையிலான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முழு அளவில் இந்த பணிகளை செய்ய முடியும். எனவே பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பதுடன், அவ்வாறு விதிமீறி கொட்டுபவர்கள் குறித்த தகவலை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

* பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்

சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பைகள், கட்டிட இடிபாட்டு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் அமலில் உள்ள அபராதத் தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 இருந்து அபராதத் தொகை ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மேற்கூறப்பட்ட உயர்த்தப்பட்ட அபராதத் தொகையினை செயல்படுத்துவதன் மூலம் சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பைகள், கட்டிட இடிபாட்டு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற விதிமீறல்கள் வெகுவாக குறைக்கப்படுவதுடன் சென்னை மாநகரம் தூய்மையாக பராமரிக்கப்படும்.

* தொய்வில்லா பணிக்காக 111 துப்புரவு ஆய்வாளர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் எந்தவிதமான தொய்வின்றி நடைபெறும் வகையிலும் மற்றும் கள அளவில் துப்புரவு பணிகளை கண்காணித்து செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் துப்புரவு ஆய்வாளர் பதவியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டு, துப்புரவு மேஸ்திரி பதவியில் பணிபுரிந்து வந்த 111 பணியாளர்களுக்கு துப்புரவு ஆய்வாளர்களாக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.

The post குப்பைகள் இல்லா நகரமாக மாறும் சென்னை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kumaraguruparan ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை...