×

சென்னை-திருச்சி, திருச்சி-கரூர், திருச்சி-தஞ்சாவூர், கோவை-கரூர் 6வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

ஒரு நாட்டின் தொழில் வளத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த சாலை, போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி மிகவும் முக்கியம். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியே பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

இதற்காக உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தொழிற்சாலைகள் அமைத்து லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார். ஏற்றுமதியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலம், வேலைவாய்ப்புகளை அதிகம் கொடுக்கும் மாநிலம் என 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களை அடுத்து, பட்டி தொட்டியெங்கும் உள்ள 2ம் மற்றும் 3ம் நகரங்களை மேம்படுத்தவும், தொழில் வளத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக 2ம் மற்றும் 3ம் நகரங்களில் டைடல் பார்க், மினி டைடல் பார்க், புதிய தொழிற்சாலைகள் என கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி விரைவாக செயல்படும் வகையில் முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ஒன்றிய அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக தொழில் காரிடர்களாக உள்ள கொங்கு மண்டலம், மத்திய மண்டலம், ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, விமான நிலையங்களை கொண்டு வருவது, சரக்கு கையாளும் கிராமங்களை அமைப்பது (கிருஷ்ணகிரி, பரந்தூர் பகுதிகளில் கார்கோ கிராமம்) போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள் எளிதில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கும், சரக்குகளை துறைமுகம் மூலமாக கையாள்வதற்கும்,

பெங்களூருக்கு இணையாக தொழில்களை மேம்படுத்தவும் ஓசூரில் விமான நிலையம், சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே, சென்னை மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை என பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் தொழில் நகரங்களாக உள்ள சென்னை, கரூர், கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் 6 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை-திருச்சி 6 வழி பசுமை சாலை, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-கரூர், கோவை-கரூர் 6 வழிச்சாலை, திருச்சி-காரைக்குடி வரை 4 வழிச்சாலை, பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வே, திருச்சி-காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதியை மக்கள் எளிதில் சென்றடையும் வகையிலும் பெருங்களத்தூர்-செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு 6 வழி எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் முடிந்தால் சென்னை-திருச்சியை வெறும் 4 மணி நேரத்தில் கடக்க முடியும். திருச்சி மற்றும் திருச்சி-தஞ்சாவூர் சாலையில் பெல், பொன்மலை ரயில் பெட்டி தொழிற்சலை என பல்வேறு ஒன்றிய அரசு நிறுவன நிறுவனங்கள் உள்ளன. கரூரில் உள்ள வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில்கள், ஜவுளி என பல தொழில்கள் உள்ளன. இதேபோல், தொழில் நகரங்களில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் வே சாலையும் அமைக்கப்பட உள்ளது. கோவை முதல் கரூர் வரையிலான கிழக்கு பைபாஸ் ரோடு திட்டம் 2016ல் அறிவிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டத்தின் வழியாக சுமார் 182 கிமீ தூரத்திற்கு இந்த பைபாஸ் ரோடு பசுமைப்பாதையாக உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 7,565 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டது. இந்த பைபாஸ் ரோடு திட்டத்திற்கான சாத்தியக்கூறு அம்சங்கள் கடந்த 2018ல் ஆராயப்பட்டது.

ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினர் மூலமாக இந்த சாலை பணிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டாக ஒன்றிய அரசு இத்திட்டத்தை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. கோவை மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பனியன், பவுண்டரி, பம்பு, மோட்டார், வெட் கிரைண்டர், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் அளிக்கப்படுகிறது. கோவையில் உற்பத்தி பொருட்களை வெளியூர், வெளி மாநிலம் அனுப்ப சாலைகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவேதான் ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கான நிதியை பாரத் மாலா திட்டத்தில் இருந்து பெற்று பணியை நடத்தலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நிலங்கள் கையகப்படுத்தில் தாமதம் இருப்பதால் இந்த 6 வழிச் சாலை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து விரைவில் டெண்டர் விடப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், சென்னை-திருச்சி-தஞ்சாவூர்-பிள்ளையார்பட்டி(சிவகங்கை) வழியாக தூத்துக்குடிக்கு விரைவு சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் முடிந்தால் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள் கையாளும் பொருட்கள் எளிதில் சென்னை துறைமுகத்தை அடையலாம். இந்த விரைவு சாலைகள், மேம்பாலங்கள் பணிகள் முடிந்தால், தென்மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னை நகருக்குள் செல்லாமல் வண்டலூர் வெளிவட்ட சாலை மூலம் எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தை அடையும். இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை நாட்டுக்கு கொண்டு வரும்.

* தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 6,805 கிலோ மீட்டர்.

* தமிழ்நாடு அரசிடம் 1,677 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

* மீதமுள்ள 5,128 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (நகாய்) பரமாரிக்கப்பட்டு வருகின்றன.

* திருச்சியில் ரூ.1,616 கோடியில் பிரமாண்ட அவுட்டர் ரிங் ரோடு
தமிழ்நாடு அரசின் எண்ணற்ற திட்டங்களால் திருச்சி மாநகரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. பல புதிய தொழிற்சாலைகள், தொழில்நுட்ப ரீதியான நிறுவனங்கள் திருச்சியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை ஆதாரமாக கொண்டு பல்வேறு வளர்ச்சி பாதையை நோக்கி திருச்சி மாவட்டம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.

இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொலைநோக்கு திட்டத்துடன் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 25 கி.மீ, பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 19.96 கி.மீ 4 வழி சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை முகமை அதிகாரிகள் கூறுகையில்,‘‘புதிய 4 வழிச்சாலைகள் அமைக்க அரசிற்கு ரூ.1616 கோடி மதிப்பீட்டில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாலைக்கான அனுமதி இன்னும் 6 மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி கிடைத்த சில மாதங்களிலேயே ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். மொத்தமாக 45 கி.மீ தூரம் 4 வழிச்சாலைகள் அமைய உள்ளது. இந்த சாலைகள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், திருச்சி நகருக்குள் நுழையாமல் நேரடியாக சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை வந்தடையும்.

திருச்சியில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். மேலும் பஞ்சப்பூரில் இருந்து கோவை, திருப்பூர், கேரளா, போன்ற பகுதிகளுக்கு செல்ல நகரப்பகுதிக்குள் வராமல் ஜீயபுரத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு செல்ல முடியும். பஞ்சப்பூர் பகுதியில் 3 கி.மீ தூரத்திற்கு எலிவேட்டடு பாலம் அமைக்கப்பட உள்ளது. கனரக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்கும் அளவிற்கு இந்த சாலையின் பயன்பாடு இருக்கும்’’ என்றனர்.

* கோவை – கேரளா சாலையும் விரிவாக்கம்
கோவை மதுக்கரை-நீலாம்பூர் இடையே 26 கிமீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு கடந்த 1999ல் அமைக்கப்பட்டது. பைபாஸ் ரோட்டில் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை கோவை, கேரளா இடையே முக்கிய வழித்தடமாக இருக்கிறது. போக்குவரத்து வாகனங்கள் அதிகமானதால் இந்த பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து மெதுவாக செல்ல வேண்டியிருக்கிறது.

குறிப்பாக சிந்தாமணிப்புதூர் சிக்னல் பகுதியில் 3 கிமீ தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. இங்கே மேம்பாலம் கட்டாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள இரு வழிப்பாதையை 6 வழிப்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் துவங்க சுங்க வரி வசூல் விவகாரம் தடையாக இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டது. எனவே விரைவில் மதுக்கரை-நீலாம்பூர் பைபாஸ் பணிகளும் துவக்கப்படவுள்ளது.

The post சென்னை-திருச்சி, திருச்சி-கரூர், திருச்சி-தஞ்சாவூர், கோவை-கரூர் 6வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy ,Trichi-Karur ,Trichi- ,Thanjavur ,Goai-Karur ,6way Green Express Road ,Tamil Nadu ,Goai-Karur 6way Green Express Road ,
× RELATED சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில்...