×

திருப்பதி கோயிலில் 7ம் நாள் பிரமோற்சவம்; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா: கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பரவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்தபோது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கோஷங்கள் எழுப்பினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி நடைபெற்றது.

நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். மாலை தங்க தேரோட்டம் நடந்தது. 32 அடி உயரம் உள்ள பாயும் குதிரைகளுடன் கூடிய தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்தார். மகாலட்சுமியின் சொரூபமாக பெண்கள் விளங்குவதாலும் தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரியது என்பதாலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7 மணியளவில் கஜ (யானை) வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார்.

பிரமோற்சவ 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி 4 மாட வீதியில் உலா வந்தார். ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலத்தில் வருவதன்மூலம் சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே என கலியுகத்திற்கு உணர்த்தும் வகையில் இந்த சூரிய பிரபை உற்சவம் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க காலை 6 மணியளவில் சூரிய உதயத்திற்கு முன்பு ஏழுமலையான் கோயில் அருகே கிழக்கு திசை நோக்கி மலையப்ப சுவாமி காட்சி தர, அப்போது சூரிய கதிர்கள் மலையப்ப சுவாமியின் மீது படர்ந்ததும் வேதமந்திரங்கள் முழங்க மகா தீப ஆரத்தி காட்டப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தியுடன் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாடவீதியில் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் கலாச்சார நடனங்கள் ஆடியபடி கலைஞர்கள் ஊர்வலமாக வந்தனர். இன்றிரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடக்கிறது. 8ம் நாளான நாளை காலை ‘மகா ரதம்’ என்றழைக்கப்படும் தேரோட்டம் நடக்கிறது. மாலையில் அஸ்வ (குதிரை) வாகனத்தில் சுவாமி பவனி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (12ம்தேதி) காலை தீர்த்தவாரியும் அன்று மாலை பிரமோற்சவ கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

ஒரே நாளில் 79,000 பேர் தரிசனம்;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 79,753 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,623 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.48 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது. சுமார் 8 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசன பக்தர்களும், 2 மணிநேரம் காத்திருந்து ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களும் தரிசித்தனர்.

The post திருப்பதி கோயிலில் 7ம் நாள் பிரமோற்சவம்; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா: கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பரவசம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Malayappa Swami Road ,Surya Prabhai Vahanam ,Govinda ,Tirumala ,Malayappa Swami ,Surya Prabai Vahanam ,Tirupati ,Eyumalayan ,Temple ,Promotsavam ,Tirupati Esumalayan Temple ,Annual Consecration ,Surya ,Paravasam ,
× RELATED திருட்டுத்தனமாக திருப்பதி கோயிலில்...