கரூர், அக். 10:கருர் நகர காவல் சரகத்திற்குட்பட்ட மனோகரா கார்னர் பகுதியில் உள்ள ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் முத்தாள் மற்றும் சஞ்சீவி ஆகியோர் வெவ்வேறு நாட்களில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, அடையாளம் தெரிந்த, பெயர், முகவரி தெரியாத நபர் ஒருவர், இருவரிடமும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை பெற்று, ஏடிஎம்மில் பணம் இல்லை எனக்கூறி அவர்களிடம் அந்த நபர், வேறொரு போலியான ஏடிஎம்மை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக இருவரும் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, டிஎஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், குற்றச் செயலில் ஈடுபட்டது, குளித்தலையை சேர்ந்த சரவணக்குமார் என்பது தெரியவந்ததோடு, அவரை போலீசார் கரூர் பேரூந்து நிலையம் அருகே வைத்து கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து போலியான ஏடிஎம்கள் மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், மேலும், நாமக்கல், மணப்பாறை, வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, திருமங்கலம் போன்ற பகுதிகளிலும் இதே குற்றத்தை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பொருட்களை வாங்க, பணம் எடுக்க ஏடிஎம்களுக்கு செல்லும் போது, முன்பின் அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டுகளை கொடுக்க கூடாது, பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்ததோடு, எதிரியை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கும் எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
The post தீபாவளி பண்டிகைக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைக்கும் கும்பல் appeared first on Dinakaran.