×

வளர்ப்பு பிராணிகளை விஷம் வைத்து கொன்ற பெண் கைது பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர், அக்.10: பெரணமல்லூர் அருகே வளர்ப்பு பிராணிகளான நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த நமத்தோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்(39). அதே பகுதியை சேர்ந்தவர் விஜயா(45). இவர்கள் இருவரின் நிலமும் அருகருகே உள்ளது. இதில், சங்கரின் நிலம் மேட்டுப்பகுதியில் உள்ளதால் தண்ணீர் இறைக்கும்போது விஜயா நிலத்தில் வழியே செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் வளர்த்து வரும் 2 நாய்கள் மற்றும் 6 கோழிகள் வாயில் நுரை தள்ளி இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, இறந்து கிடந்த வளர்ப்பு பிராணிகளை பரிசோதனை செய்தபோது, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெரணமல்லூர் போலீசில் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சங்கருக்கு சொந்தமான வளர்ப்பு பிராணிகளை விஜயா விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விஜயாவை நேற்று கைது செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக வளர்ப்பு பிராணிகள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வளர்ப்பு பிராணிகளை விஷம் வைத்து கொன்ற பெண் கைது பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Shankar ,Namathod ,Tiruvannamalai district ,Vijaya ,
× RELATED தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!