×

ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முடிவுரையாக தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது: தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்காமல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு, சமக்ர சிக்‌ஷா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக மாநில அரசின் சார்பில் ரூ. 100 ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர் சங்கங்களை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் எம்பி தங்கபாலு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

* ‘ஆசிரியர்களுக்கு துணை நிற்போம்’
ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆசிரியர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசு மூலம் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-2025 கல்வி ஆண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு 60சதவீதம் பங்காக ரூ.2151 கோடி. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் முதல் தவணை பெறப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்க வேண்டும் என நேரில் கோரிக்கை வைத்தார். ஆனாலும் ஒன்றிய அரசு இது வரை அதுகுறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதால், ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,union government ,Chennai ,Valluvar district of ,Tamil ,Nadu ,
× RELATED ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள...