×

மாற்று பயிர் சாகுபடியால் நிம்மதியடையும் விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு விதைகள் மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும்

*தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி : வெப்ப பகுதிகளில் நன்கு வளரும் பயிரான பப்பாளி சாகுபடிக்கு முன்பு போல் விதைகள் இலவசமாக வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், வல்லநாடு, குரும்பூரில் இறவை பாசனமும், வட பகுதிகளான கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த மானாவாரி கரிசல் நிலங்களாகவும் உள்ளன. ஆற்றுப்பாசனம் ஆண்டுக்கு இருபோகமும், வானம் பார்த்த பூமியில் மானாவாரி நிலங்களில் ஆண்டுக்கு ஒரு போகமும் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வட பகுதிகளான கோவில்பட்டி, கழுகுமலை, விளாத்திகுளம், புதூர் பகுதியில் சில கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய், காய்,கனி, வாழை, வெற்றிலை, மக்காச்சோளம், கம்பு பயிரிட்டு உள்ளனர். கூலி உயர்வு, மருந்து, உரம் விலை உயர்வு ஆகியவற்றால் விவசாயத்தில் போதிய லாபமின்மையால் தொடர் சாகுபடி செய்ய விவசாயிகள் மலைத்தனர். இதனால் தோட்ட பாசன விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அழகாபுரி அருகே மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு லாபமும், நிம்மதியும் அடைந்தனர்.இதுகுறித்து சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், பப்பாளியில் பல வகைகள் உள்ளன. கிங்காங் எனப்படும் பப்பாளி ஒருவகையும், ரெட்லேடி எனப்படும் பப்பாளி மற்றொரு வகையும் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது.

கிங்காங் எனப்படும் பப்பாளி வகை ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் 6க்கு 6 அடி இடைவெளி விட்டு ஊன்ற வேண்டும். கன்று ஊன்றி எட்டாவது மாதத்தில் காய் பிடிக்கும். காய் ஓரளவு பருத்த பின் காய் தோல் பகுதியில் இரவில் 3 மிமீட்டர் ஆழத்திற்கு பிளேடால் 4 இடங்களில் லேசாக கீறி விடுவார்கள். சொட்டு சொட்டாக பால் வடிந்து மரத்தடியில் வைத்துள்ள பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பால் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 210 கிலோ பால் கிடைக்கிறது. பாலாடைக் கட்டிபோல் சேர்ந்திருக்கும் ஒரு கிலோ பால் ரூ.130க்கு கொள்முதல் செய்கின்றனர்.

பால் வடிந்து முடிந்த பப்பாளி காய் ஏக்கருக்கு இருபது டன் வீதம் கிடைக்கிறது. ஒரு கிலோ பப்பாளி காய் ரூ.3க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு நான்கு முறை காய் பறிக்கப்படுகிறது. ஒரு பறிப்பிற்கு சுமாராக ரூ.80 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. மற்றொரு வகையான ரெட் லேடி பப்பாளி பழம் அன்றாடம் உண்ணக் கூடியது. இப்பப்பாளி விதை பத்து கிராம் ரூ.4,500. பத்து கிராமில் சுமார் எழுநூறு விதைகள் இருக்கும். ஏக்கருக்கு 700 விதைகள் ஊன்ற வேண்டும். அதில் சுமார் 500 விதைகளில் முளைப்பு திறன் காணப்படும். இதன் பலன் எட்டாவது மாதத்தில் இருந்து தொடங்கும். ஒரு கிலோ ரூ. 15 முதல் 18 வரை விலை போகிறது.

வாரத்திற்கு ரூபாய் இருபதாயிரம் முதல் ஆண்டுக்கு ரூபாய் மூன்று லட்சம் வரை கிடைக்கிறது என்றனர். கிள்ளிக்குளம் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பப்பாளி விதைகள் முன்பு இலவசமாக வழங்கப்பட்டன. ஆனால் கடந்தாண்டு முதல் வழங்கப்படவில்லை. எனவே பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும். பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது.

ஐந்தாண்டுகள் மட்டுமே அதன் ஆயுட்காலம் ஆகும். மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது. அதனையும் அரசே ஏற்று முழு மானியத்தில் மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் வலியுறுத்தினார்.

பப்பாளி பாலில் இருந்து ஜெலட்டின் உறை

பப்பாளி பாலின் மருத்துவ தன்மை குறித்தும், இந்தப் பாலை வாங்கும் நாடுகள் இதனை எதற்கு பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் சித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘‘மாத்திரைகளின் மீது வரும் ஜெலட்டின் உறையைத் தயாரிக்க விலங்கு இறைச்சியில் இருந்து கிடைக்கும் மூலப்பொருளே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில நாடுகளில் ஜெலட்டின் உறையைத் தயாரிக்க விலங்கு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது.

அதனால், அந்த நாடுகளில் பப்பாளி பாலில் இருந்து ஜெலட்டின் உறை தயாரிக்கப்படுகிறது. அதற்காகத் தான் நம் நாட்டில் இருந்து பப்பாளிப் பாலை சில வெளி நாடுகள் வாங்குகின்றன. பொதுவாக பப்பாளிப் பாலில் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அத்துடன் பித்தத்தை சீரமைக்கும் பண்பும் பப்பாளிப் பாலில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

The post மாற்று பயிர் சாகுபடியால் நிம்மதியடையும் விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு விதைகள் மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Toothukudi District ,Thoothukudi District ,Srivaikundam ,Satankulam ,Thiruchendur ,
× RELATED கனமழை எதிரொலியாக திருச்செந்தூர்...