×

பழைய சாதம்… பச்சை மிளகாய்!

நன்றி குங்குமம் தோழி

பழைய சாதம்… பச்சை மிளகாய்!

‘‘வெயில் காலம் என்றால் பழைய சோறும் கூழும் எங்க கடையில் பட்டைய கிளப்பும். எங்களைத் தேடி வருகிற வாடிக்கையாளர்கள் எல்லாமே அதைக்கேட்டுதான் வாங்கி சாப்புடுவாங்க. அதுவும் பழைய கஞ்சி விற்பனை ரொம்ப ஜோரா நடக்கும். சனி, ஞாயிறுன்னா குழந்தைகளோடு வந்து குடும்பமா சாப்பிட்டுப் போவாங்க. விஐபி கஷ்டமர்களும் எங்களுக்கு உண்டு. அவுங்க எல்லாம் பார்சல் செய்து வாங்கீட்டுப் போறாங்க’’ என பேச ஆரம்பித்தவர் பாரம்பரிய கிராமிய உணவுகளை மீட்டெடுப்பதற்காக சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் பாரம்பரிய உணவகம் ஒன்றை நடத்தி வரும் ரஞ்சித்.

‘‘பழைய சாதம், சின்ன வெங்காயம், மோர் மிளகாய், சீனிவர வத்தல், மாவடு ஊறுகாய், கூடவே கூழ், களி, கம்பு, கருவாட்டு குழம்பு, உப்புக் கறி, மீன் குழம்பு, கறிக் குழம்புன்னு காலை
7 மணியில் இருந்தே வியாபாரம் களைகட்டும். காலையில் பழைய கஞ்சி சாப்பாட்டுக்குன்னு ஒரு கூட்டம் வரும். கூழ் குடிக்கன்னு ஒரு கூட்டம் வரும்’’ என்றவர், இதற்கு முன்பு 17 ஆண்டுகளாக கூழ் மட்டுமே விற்பனை செய்து வந்தவராம்.

‘‘2008ல் தள்ளுவண்டியில் நடைபாதையில் வைத்து, கம்பங் கூழ், கேப்பைக் கூழ் விற்பனைக்காக மட்டுமே உருவான கடை இது. வருடம் 365 நாளும் என் கடையில் கூழ் கிடைப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் அதிகமாயினர். இப்பவும் என்னைத் தேடி வருபவர்கள் பெரும்பாலும் 17 வருட வாடிக்கையாளர்கள்தான். காரணம், தள்ளுவண்டியில் கொடுக்கும் உணவு மாதிரி இல்லாமல் கொடுப்பதை சுத்தமாகவும் சுவையாகக் கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் எனக்கு நிரந்தரம்.

ஒருகட்டத்தில் தள்ளுவண்டிக் கடையை சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து டிராபிக் ஜாம் ஆகத் தொடங்கியது. ரொம்பவே யோசித்து சிறிய அளவில் இந்தக் கடையை வாடகைக்கு எடுத்து, பாரம்பரிய கிராமிய உணவகமாக கொண்டுபோக ஆரம்பித்தேன்.கடை போட்டதுமே பழைய கஞ்சியை கூடவே இதில் இணைக்கலாம் என முடிவு செய்து, கஞ்சியோடு, களி, கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, உப்புக் கறி, கீரை, மோர் மிளகாய், சின்ன வெங்காயம், மாவடு ஊறுகாய்னு கொடுக்க ஆரம்பித்தோம்.

பார்த்தால் என்னோட ரெகுலர் வாடிக்கையாளர்கள் தவிர்த்து சில விஐபி வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தனர்’’ எனப் புன்னகைத்த ரஞ்சித், ‘‘காலை 7 மணிக்கு திறக்கப்படும் கடை, மாலை 4 மணி வரை உண்டு. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளோடு குடும்பமாக வந்து சாப்பிட்டுப் போகிறவர்களும் உண்டு. பழைய கஞ்சி சாப்பிடுவதற்கென இளைஞர் பட்டாளமும் வரும். வார இறுதி என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் பழைய சோறு சீக்கிரமே காலியாகிவிடும்’’ என்கிறார் புன்னகைத்தபடி.

‘‘நானும் என் மனைவி செண்பகமும் சேர்ந்து மாலையே அரிசிய ஊறவச்சு, இரவு வடிச்சு, தண்ணிய சாதத்தில் ஊற்றி வச்சுடுவோம். அதிகாலையில எடுத்து நீர் மோர், உப்பு சேர்த்து, மண் கலயங்களில் கஞ்சியினை வாடிக்கையாளர்களுக்கு ஊற்றி கொடுப்போம். ஒரு கலயம் 40 ரூபாய். பார்சல் என்றால் மட்டும் 50. இத்துடன் சின்ன வெங்காயம், மோர் மிளகாய் ஊறுகாய், கீரை போன்றவை இணைத்து தருவோம். இது தவிர்த்து அசைவப் பிரியர்கள் கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை தொக்கு போன்றவற்றைக் கேட்டால் அதற்கு தனியாக ஒரு பிளேட்டுக்கு 40 ரூபாய் முதல் ஆகும்’’ என்கிறார் ரஞ்சித்.

பழைய சோறுக்கு வாடிக்கையாளர்களிடம் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கு என்ற நம் கேள்விக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, ரஞ்சித்தோடு இணைந்து தனது பங்களிப்பைத் தரும் அகிலன் பேச ஆரம்பித்தார்… ‘‘பாரம்பரிய உணவுகளை மட்டும் ஏன் தள்ளுவண்டியிலோ அல்லது சாலையோரமாகவோ வைத்து விற்பனை செய்யணும். இந்த எண்ணத்தையும் மாற்றணும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கடையை எடுத்து நடத்த ஆரம்பித்தோம். இதில் மண் கலயத்தில் கஞ்சியை தந்தவுடன் இதை சாப்பிடுவதற்காகவே வருகிற வாடிக்கையாளர்கள் அதிகமாகிவிட்டனர்’’ என்றவர், ‘‘எங்கள் கடையை தேடி வருகிற வாடிக்கையாளர்கள் எல்லாமே 17 வருடமாக இங்கு வந்து கொண்டு இருப்பவர்கள்தான்.

எங்களுக்கு அவுங்க இப்ப குடும்பமா மாறிட்டாங்க. வந்ததும் வீட்ல இருக்கவுங்கள பற்றியும், அவர்களின் ஆரோக்கியம் குறித்துதான் விசாரிப்போம். அப்புறம்தான் கஞ்சி, கூழ் எல்லாம்’’ என்றவாறு புன்னகைத்து விடைபெற்றனர்.வீட்டுக்குள் முடங்கி, சிலந்திவலையில் சிக்கித் தவிப்போரை ஆன்லைன் உணவகங்கள் குறிவைத்து கடைவிரிக்கும் இன்றைய காலகட்டத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் இழந்த சக்தியை மீட்டுத்தர நொடியில் கைகொடுப்பது பழைய சோறு கஞ்சிதான். சுடச்சுட வடிச்சு சாப்பிடுகிற உணவைவிட, வடிச்சு, தண்ணி ஊற்றி, பத்து மணி நேரம் கழித்து சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், அயர்ன், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது என்கிறது மருத்துவ உலகம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post பழைய சாதம்… பச்சை மிளகாய்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...