×

ஓசூர் அருகே மாநில எல்லையில் புற்றீசல் போல் பெருகி வரும் பட்டாசு கடைகள்

*ஆய்வு செய்ய கோரிக்கை

ஓசூர் :ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் புற்றீசல் போல் முளைப்பது வழக்கம். வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜூஜுவாடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக இந்த கடைகளில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் வேலை நிமித்தமாக ஓசூரில் தங்கியுள்ளனர். அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல், தொழில் முனைவோர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக செல்பவர்கள் பெட்டி பெட்டிகளாக பட்டாசுகள் வாங்கிச் செல்கின்றனர்.

அவர்களை குறி வைத்து மாநில எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் பட்டாசு கடைகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல், கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் ஏராளமான பட்டாசு கடைகள் தொடங்கப்படுகின்றன. இந்த கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு வருடமும் அரசு அறிவித்து வருகிறது. மேலும், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளின் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஒரு சிலர் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி அனுமதியில்லாமல் கடை நடத்தவும் செய்கிறார்கள். அந்த வகையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்னர் மாநில எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு குடோனுக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கி வைத்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி பட்டாசு வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் உள்பட 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இவர்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவர்கள். படித்துக் கொண்டே பகுதி நேரமாக தீபாவளி சமயத்தில் பட்டாசு கடைக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், சம்பவத்தின்போது மூன்று கனரக வாகனங்கள் மட்டுமின்றி ஒன்பது இருசக்கர வாகனங்களும் தீக்கிரையானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

உயிரிழந்தோருக்கு அமைச்சர்கள் சுப்ரமணியன், சக்கரபாணி அஞ்சலி செலுத்தினர். மேலும், கர்நாடக மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும், உயரதிகாரிகளும் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

விபத்து நடந்த பின்பு அனுதாப்படுவதை விட விபத்து நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஓசூர் அருகே மாநில எல்லையில் புற்றீசல் போல் பெருகி வரும் பட்டாசு கடைகள் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Diwali ,Jujuwadi ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 400 கனஅடியானது