×

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குமரி விவசாயிகளுக்கு ₹4.38 கோடி மானியம்

*நவீன உபகரணங்கள் வாங்கி சாகுபடியை மேம்படுத்த உதவி

நாகர்கோவில் : வேளாண்மை சாகுபடியை மேம்படுத்தும், நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் குமரி விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4.38 கோடிக்கு மேல் மானியத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறைக்கு உட்பட்ட வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம், மானிய விலையில் விவசாயிகளுக்கு மின் மோட்டர் பம்பு செட் வழங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம், சிறு பாசனத்திட்டம், வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேளாண் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த திட்டங்களை மாவட்டங்கள் தோறும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்திலும் வேளாண் பொறியியல் துறையின் கீழ், பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான உப இயக்கம் திட்டத்தின் கீழ் டிராக்டர், சுழல் கலப்பை, விசை உழுவை, புல் வெட்டும் இயந்திரம், களையெடுக்கும் கருவி ஆகிய இயந்திரங்கள் 32 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 81 ஆயிரத்து 983 மானியத்தில் வழங்கப்பட்டது.

வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 12 விவசாயக் குழுக்களுக்கு ரூ.96 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. 2022-23-ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான உப இயக்கம் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 17 ஆயிரத்து 59 மானியத்தில் வழங்கப்பட்டது.

கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 5 விவசாய குழுக்களுக்கு ரூ.64 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 15 பயனாளிகளுக்கு விசை உழுவை இயந்திரங்களுக்கான மானியம் ரூ.11 லட்சத்து 81 ஆயிரம் வழங்கப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான உப இயக்கம் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து ஆயிரத்து 317 மானியத்தில் வழங்கப்பட்டது.

கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 7 விவசாய குழுக்களுக்கு ரூ.56 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 46 பயனாளிகளுக்கு விசை உழுவை, விசை களை எடுக்கும் இயந்திரங்கள் ரூ.32 லட்சத்து 11 ஆயிரத்து 630 மானியத்தில் வழங்கப்பட்டது.

2024-25-ம் நிதியாண்டில் கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க 8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.64 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான உப இயக்கம் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 500 மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

குருந்தன்கோடு வட்டாரம் கக்கோட்டுதலை ஊராட்சிக்குட்பட்ட ஆல்பாட்டுவிளை பகுதியை சேர்ந்த ரெஜிலம்மாள், அகஸ்தீஸ்வரம் வட்டாரம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இரவிபுதூர் பகுதியை சேர்ந்த ஆ.மாசானம் தெரிவிக்கையில், நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் கீழ், மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்படுவது உழவு பணியை மேம்பாடு அடைய செய்துள்ளது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், வருமானத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றனர்.

வருமானம் அதிகரிக்கும்

இது குறித்து கலெக்டர் அழகுமீனா கூறுகையில், குமரி மாவட்டம் வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், சாகுபடி செலவை குறைக்கவும், பண்ணை மின்சாரம் கிடைப்பதை அதிகரிக்கவும், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கவும், இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்கவும் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேளாண் இயந்திரமயமாக்கலின் மூலம் விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துதல், விவசாய பணிகளுக்கான காலத்தை குறைத்தல், ஆபத்துகளை நீக்குதல் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் சிரமங்களை நீக்குதல் ஆகியவை விவசாயிகளின் அதிக நிகர வருமானத்தை அதிகரிக்கும் என்றார்.

பெண்களுக்கு 50 சதவிகிதம்

வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் வாயிலாக சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கப்படுகிறது.இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் கூடுதலாக 20 சதவிகிதம் மானியம் பெற முடியும்.இத்திட்டம் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு online Portal www.mts.aed.tn.gov.in மூலமாக மட்டும் செயல்படுத்தப்படும்.

The post வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குமரி விவசாயிகளுக்கு ₹4.38 கோடி மானியம் appeared first on Dinakaran.

Tags : Department of Agricultural Engineering ,Nagargo ,Kumari ,Tamil Nadu ,Department of Agriculture and Labour ,Dinakaran ,
× RELATED குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி...