×

இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!!

டெல்லி : இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.தனி விமானம் மூலம் நேற்று டெல்லி வந்த அதிபர் முகமது முய்ஸு, முதலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் ஷங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும் பிரதமர் மோடியையும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் இந்த பயணம் இரு நாட்டு பரஸ்பர உறவில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. மாலத்தீவில் இருந்து இந்திய இராணுவமே வெளியேறு என்று பிரச்சாரம் மேற்கொண்டு கடந்த ஆண்டு மாலத்தீவில் ஆட்சியை பிடித்தவர் தான் முகமது முய்ஸு.

அதைத் தொடர்ந்து இந்தியாவுடனான உறவில் இருந்து விலகி, சீனாவுடன் முகமது முய்ஸுஎல்லைமீறி நெருக்கம் காட்டியது அப்போது விவாதப் பொருளானது. லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி சென்று வந்ததை மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் விமர்சனம் செய்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அந்நாட்டின் சுற்றுலாத் துறை ஆட்டம் கண்டது. பொருளாதார நெருக்கடியிலும் கடனிலும் சிக்கியுள்ள மாலத்தீவு அரசு, தற்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது.

மறுபுறத்தில் இந்தியா , சீனா ஆகிய நாடுகள் உடனான தங்களின் உறவில் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்கனவே இறுகிப்போன இரு நாட்டு உறவில் ஒரு தளர்வை ஏற்படுத்தவுமே முகமது முய்ஸு இந்தியா வந்துள்ளார் என்று தெரிகிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் அரசுமுறை பயணத்தை இணக்கமாதலுக்கான பயணம் என்று சில ஆங்கில ஏடுகள் வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளன.

The post இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,President ,Mohammed Muysu ,Mohammad Muaysu ,Dinakaran ,
× RELATED 1971 போரில் இந்தியாவிற்கு வெற்றியை...